தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய அதிமுகவுக்கு 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அக்னி பரீட்சையாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவருமான சசிகலா இப்போது அதிமுக பொன்விழாவை முன்னிட்டு ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியபின் தொண்டர்களை சந்திக்க தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதனால், அதிமுகவின் இரட்டை தலைமை ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் ஒரு சவாலை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் 1972 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அதிமுக அக்டோபர் 17ம் தேதி 50வது ஆண்டில் அடியெடுத்து வைத்து பொன்விழாவை கொண்டாடுகிறது.
எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு, ஜெயலலிதா போராடி கட்சியைக் கைப்பற்றினார். அதற்கு பிறகு கால் நூற்றாண்டுக்கு மேலாக கட்சியின் ஒற்றைத் தலைமையாக விளங்கினார். அதன் பிறகு, அவர் டிசம்பர் 5, 2016ல் மறைவுக்கு பிறகு, அதிமுகவில் பல நிகழ்வுகள் நடந்துவிட்டன.
அதிமுகவையும் ஆட்சியையும் கைப்பற்ற நினைத்த சசிகலாவின் முயற்சி ஓ.பன்னீர்செல்வத்தின் தர்ம யுத்தத்தால் தடைபட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் தண்டனை உறுதி செய்யப்பட்டு சிறை சென்றார். முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமியும் - ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து சசிகலாவையும் டிடிவி தினகரனையும் அவர்கள் உறவினரையும் கட்சியில் இருந்து வெளியேற்றினார்கள். தினகரன் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் குழு கிளர்ச்சியில் ஈடுபட்டபோது ஈபிஎஸ் அவர்களின் எதிர்ப்பை சமாளித்து ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டார்.
அதற்கு பிறகு வந்த 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 21 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்தாலும் இடைத் தேர்தலில் தேவையான இடங்களை வென்று அதிமுக தலைமை ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத் தேர்தல் நடந்தபோது அதிமுக ஆளும் கட்சியாக இருந்தது.
அதன் பிறகு, 2020ல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும்பாலான இடங்களை வென்றது. ஆனால், அதிமுக அப்படி ஒன்றும் படுதோல்வி அடைந்துவிடவில்லை. கிட்டத்தட்ட அது திமுகவுக்கு நெருக்கமான வெற்றி. இந்த தேர்தலின்போதும் அதிமுக ஆளும் கட்சியாக இருந்தது.
இதனைத் தொடர்ந்து, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவினாலும் ஒரு வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது. சட்டமன்றத் தேர்தலின்போதும் அதிமுக ஆளும் கட்சியாக இருந்தது. சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு அதிமுகவுக்கு இடையே வெறும் 3 சதவீதம் வாக்குகள் தான் வித்தியாசம் இருந்தது.
சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயல்பட்டு வருகிறது. திமுக தலைமை சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் கூறியபடி, புகாரின்பேரில் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வழக்குப் பதிவு செய்துள்ளது.
இப்படியான சூழலில்தான், அதிமுக எதிர்க்கட்சியாக இருந்து 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை சந்தித்துள்ளது. கூட்டணியில் இருந்து பாமக தனித்து தேர்தலை சந்தித்தது. அதிமுக பாஜக கூட்டணியுடன் தேர்தலை எதிர்கொண்டுள்ளது. இதற்கு முன்னதாக அதிமுக சந்தித்த தேர்தல்கள் ஆளும் கட்சியாக இருந்து சந்தித்தவை. ஆனால், இந்த தேர்தல் அப்படி அல்ல. அதிமுக எதிர்க்கட்சியாக இருக்கிறது.
அதனால், இந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்தான் கட்சியின் அடிமட்டத்தில் அதிமுகவின் உண்மையான பலம் என்ன என்பதை காட்டும் தேர்தலாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
“சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் ஆளும் திமுக இடையேயான இடைவெளி வெறும் 3 சதவிகிதம் வாக்குகள் மட்டும்தான். இது எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் இரட்டைத் தலைமையிலான இரண்டாவது தேர்தல் ஆகும். அ.தி.மு.க -வின் வாக்குப் பங்கில் ஏதேனும் பெரிய குறைவு ஏற்பட்டால், அது கட்சியின் தலைமை குறித்த கேள்விகளுக்கு வழிவகுக்கும்” என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுவான கருத்து என்னவென்றால், வருமான வரித்துறை சசிகலா சொத்துக்களை இணைத்ததை அடுத்து, அவர் அரசியலில் இருந்து விலகி இருப்பார். ஆனால, ஜெயலலிதாவுக்கு துணையாக இருந்த அவருக்கு வேறு அரசியல் திட்டங்கள் உள்ளன. அவர் பயப்படமாட்டார் என்று அவருடைய ஆதரவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சசிகலா வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார். அடுத்த வாரத்திற்குள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். ஏனெனில், அதிமுக பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. சசிகலா அணி அமைதியாகவும் சீராகவும் தயாராகி வருகிறது அமமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஊரக உள்ளாட்சி தேர்தல் வரை பொறுமையாக காத்திருந்த சசிகலா, தனது ஆதரவாளர்களிடம் அதிமுகவுக்கு எதிராகக் கலகம் செய்யாதீர்கள். அது திமுகவுக்குதான் நன்மை தரும் என்று கூறினார். அக்டோபர் 12ம் தேதி 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் சசிகலாவின் ஆதரவாளர்கள் தங்களுக்கு இன்னும் தெளிவு கிடைக்கும், சசிகலா ஆதரவாளர்களிடையே உள்ள கருத்து வேறுபாடுகளும் தீர்க்கப்படும் என்று அமமுக வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை ஒரு எதிர்க்கட்சியாக சந்தித்துள்ள அதிமுக கட்சி அடித்தளத்தில் எந்த அளவுக்கு பலமாக இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டிய நிலையில் உள்ளது. அதே நேரத்தில், சசிகலா தனது இன்னிங்சை தொடங்குவதாக அறிவித்துள்ளதால் அதிமுக மற்றொரு சவால் முன்னெழுந்துள்ளது. மொத்தத்தில் பொன்விழா காணும் அதிமுகவுக்கு இந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் ஒரு அக்னி பரீட்சையாக இருக்கும் என்றால் அது மிகையல்ல. அதில் அதிமுக தன்னை நிரூபிக்குமா என்பது நாளை வெளியாகும் தேர்தல் முடிவுகள் பதிலளிக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.