ரஷ்யாவில் எரிவாயு ஏற்றி சென்ற சரக்கு கப்பல் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 14 பேர் உயிரிழந்தனர்.இதில் மாயமான தமிழக இளைஞர்களின் நிலைமை தற்போது வரை தெரியவில்லை. இருப்பினும் அவரின் குடும்பத்தினர் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
கடந்த 21-ம் தேதி ரஷ்யாவின் மேற்கே உள்ள கிரிமியா தீபகற்பத்தின் எல்லை பகுதியான கிர்ச் ஸ்ரைட் கடலில் எரிபொருள் தீர்ந்து போன சரக்கு கப்பலுக்கு எரிவாயு செலுத்தும் போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் விபத்தில் 14 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
மேலும் இந்த விபத்தில் இருந்து உயிர் பிழைத்து கடலில் விழுந்தவர்களில் 14 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்யாவின் கப்பற்படை செய்தி தொடர்பாளர் அலெக்ஸி கிராவ்சென்கோ, விபத்தில் சிக்தி கடலில் குதித்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறினார்.
இந்த தீ விபத்தில் மாயமான மாலுமிகள் லிஸ்டில் தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் பெயரும் இடம் பெற்றிருக்கிறது. தஞ்சாவூரைச் சேர்ந்த அவினாஷ் (23) என்ற இளைஞர் ரஷ்யாவில் மெரைன் இன்ஜினியராக பணி புரிந்து வந்தார்.இந்நிலையில், தீ விபத்து ஏற்பட்ட கப்பலில் அவரும் பயணித்துள்ளார்.
அவரது நிலை என்ன? என்பது தெரியாததால் உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும் மாயமான தமிழக இளைஞர்கள் குறித்த தகவல்களை கண்டறிந்து தெரிவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில், அவினாஷ் கண்டிப்பாக உயிருடன் தமிழகத்திற்கு திரும்பி வருவார் என அவரின் குடும்பத்தார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதே போல் விபத்தில் சிக்கிய கப்பலில் கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்துறையைச் சேர்ந்த சகாயராஜ் என்பவரது மகன் செபாஸ்டின் பிரிட்டோ (24) பணியில் இருந்துள்ளார். விபத்தை தொடர்ந்து அவர் மாயமாகி விட்டதாகவும், அவரைத் தேடும் பணியில் ரஷ்ய கடற்படை ஈடுபட்டு வருவதாகவும் அவரது உறவினர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
நடுக்கடலில் தீப்பிடித்த கப்பல்கள்... இந்தியர்கள் உட்பட 11 பேர் பலி
ரஷ்யா- உக்ரைன் இடையே நெருக்கடி நீடித்து வரும் நிலையில் இத்தகைய தொடர் விபத்துக்களால் மீண்டும் பதற்றமான சூழல் அதிகரித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.