கூடங்குளம் சுப.உதயகுமாரன், இயக்குனர் விசுவுக்கு பகிரங்க சவால் விட்டிருக்கிறார். நேரடி விவாதத்திற்கு தயாரா? என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
தமிழக மக்கள் தொடர்ந்து பல்வேறு காரணங்களுக்காக போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள். அதனால் ஏற்படும் பின்விளைவுகள் என்னென்ன? அத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் ஏற்பட இருக்கும் நன்மைகள் பற்றியும் வீடியோ ஒன்றில் திரைப்பட இயக்குனர் விசு குறிப்பிட்டிருக்கிறார்.
சேலம் சென்னை எட்டு வழிச் சாலையால் ஏற்பட இருக்கும் நன்மைகள் பற்றி அவர் கூறியிருக்கும் போது, தொடர்ந்து கூடங்குளம் மற்றும் ஸ்டெர்லைட் போராட்டம் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். கூடங்குளம் பற்றி குறிப்பிட்ட போது, கூடங்குளம் பகுதி மக்களை ஒன்றிணைத்து போராட்டங்களை முன்னின்று நடத்திய சுப.உதயகுமாரன் குறித்து நேரடியாக விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்.
இதனை தெரிந்த சுப.உதயகுமாரன், இரண்டு நாட்களுக்கு முன்பு தன்னுடைய முகநூலில் அவரின் கருத்துக்கு பதில் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய பெயரினை அந்த வீடியோவில் இருந்து நீக்கிவிட்டு இரண்டு நாட்களுக்குள் முறையாக விசு தன்னிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து சுப.உதயகுமாரன் கூறியிருப்பதாவது: ‘தோழர்களே! பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சாரம் துவங்கிவிட்டது. எந்தப் பிரச்சினையைப் பற்றியும் எந்தப் புரிதலும் இல்லாத இன்னொரு சினிமா நடிகர் ஏதேதோ பேசுகிறார் இங்கே. சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை, கூடங்குளம் அணுமின் நிலையம், ஸ்டெர்லைட், குளச்சல்/குமரி துறைமுகம் எனும் நான்கு கார்ப்பரேட் வளர்ச்சித் திட்டங்களை ஆதரிக்கும் இந்த சிரிப்பு நடிகர், என்னை மட்டும் "உதயகுமார்" எனப் பெயர் குறிப்பிட்டு தாக்கி, கெட்ட நோக்கத்துடன், மன உளைச்சல் ஏற்படுத்தும் விதத்தில், அவதூறாகப் பேசுகிறார்.
"அந்த உதயகுமார்-ங்கிறவரு யாருகிட்ட காசு வாங்கினாரோ எனக்குத் தெரியல" என்று சொல்லிவிட்டு எதையோ விழுங்கி விழுங்கிப் பேசி எனது நற்பெயருக்கும், கண்ணியத்துக்கும், மாண்புக்கும் களங்கம் விளைவிக்கிறார். நடக்காத ஒன்றை, எந்த நிரூபணமும் தராமல், வேண்டுமென்றே திரும்பப் பேசி மக்கள் மனங்களில் நச்சை விதைக்கிறார். இது எனது மற்றும் எனது குடும்பத்தாரின் பாதுகாப்புக்கு பெரும் குந்தகமாக அமைகிறது.
இந்த அச்சுறுத்தல் குறித்து எனது வழக்கறிஞர்களோடு விவாதித்துக் கொண்டிருக்கிறேன். விசு மேற்குறிப்பிடும் தன்னுடைய காணொளியில் என்னுடைய பெயரை, உடனடியாக நீக்கிவிட்டு, மூன்று நாட்களில் என்னிடம் நேரடியாக வருத்தம் தெரிவிக்காவிட்டால், விசுவின் மீதும், விசுவை இயக்கும் சக்திகளின் மீதும் போலீஸ் மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுப்பேன் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.
"ரொம்ப நாளா போராடிக்கிட்டிருந்தாரு"
என்று சொல்லி ஏதோ நான் மட்டும் இவருடைய சினிமாப் பாணியில் தனிமனிதனாக நின்று போராடியது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க விழைகிறார் நடிகர் விசு. என்னுடன் பல்லாயிரக்கணக்கான மீனவர்கள், விவசாயிகள், வர்த்தகர்கள், பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் நின்று போராடியதை வசதியாக மறைக்கிறார்.
"ஆனா இப்ப அந்த கூடங்குளம் எவ்வளவு ஜம்முனு நடந்துட்டிருக்குன்னு போய் பார்த்தீங்களா?" என்று கேள்வி கேட்கிறார் இந்த அரைவேக்காடு விசு. முதலில் நீர் பார்த்தீராய்யா விசு? தற்போது கூடங்குளம் அணுமின் நிலையத்தின் இரண்டு உலைகளுமே மூடிக் கிடக்கின்றன என்பது இந்த விசுவுக்குத் தெரியாது. எதையும் தெரிந்து பேச வேண்டும் எனும் அடிப்படை அறிவு கூட இல்லாதவர்கள் பொதுப் பிரச்சினைகள் பற்றிப் பேச வந்திறங்குகிறார்கள்!
"உதயகுமார் ரூம்ல வந்து படுக்கையைப் போட்டு படுத்துட்டு போர்வையை விரிச்சு தூங்கிட்டர்ர்ணா எப்படி?" என்று கேள்வி கேட்கிறார் இந்த பெரும்போராளி விசு. விசு சினிமாவிலும், டிவியிலும், விளம்பரங்களிலும் நடித்து கோடி கோடியாக சம்பாதித்து கொழுத்துக் கொண்டிருக்கும்போது, இந்த உதயகுமார் ஏறத்தாழ இருபத்தைந்தண்டுகளாக எந்தவிதமான பிரதிபலனும் பாராமல் தனது அறிவு, நேரம், சக்தி, பணம், உழைப்பு என அனைத்தையும் நாட்டுக்காக, நாட்டு மக்களுக்காக செலவழித்துக் கொண்டிருந்தான். இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு இடிந்தகரையிலிருந்து வெளிவந்த பிறகுகூட இன்றளவும் இயங்கிக் கொண்டிருக்கிறான் உதயகுமார் பொதுவெளியில், மக்களோடு மக்களாக! எவனோ போடும் பிச்சைக்காக அல்ல.
விசு போன்ற இடைத்தரகர்கள் நான்கு முறை என் வீட்டுக்கு வந்து விலை பேசினார்கள் "போராட்டத்திலிருந்து ஒதுங்கிக் கொள், கேட்பதைத் தருகிறோம்" என்று. இது பற்றி விரிவாகப் பேசுவோமா? நாராயணசாமி முதல் நரேந்திர மோடி வரை யார் வந்தாலும் பேச நான் அணியமாக இருக்கிறேன்.
விசு இவ்வளவு நாட்கள் எங்கே போயிருந்தார்? என்ன செய்துகொண்டிருந்தார்? இடிந்தகரைக்கு, கூடங்குளத்துக்கு வந்து அணுஉலைக்கு ஆதரவாக போராடியிருக்கலாமே? ஏன் இப்போதுகூட தூத்துக்குடி, கன்னியாகுமரி, சேலம் போன்ற ஊர்களுக்குப் போய் இவர் வக்காலத்து வாங்கும் "வளர்ச்சித் திட்டங்களுக்கு" ஆதரவாக மக்களிடம் பேசலாமே? கோடம்பாக்கத்து கேமிராவுக்குப் பின்னால் ஒளிந்து நின்று ஒப்பாரி வைப்பது ஏன்? இந்த நடிப்புக்கு எவ்வளவு பணம் தந்தார்கள் பா.ஜ.க.வினர் விசு?
இலவசமாக பிரச்சாரம் செய்கிறீர் என்றால், இதுதான் உமது உண்மையான நிலைப்பாடு என்றால், நேரில் வந்து மக்களிடம் பேச திராணி இருக்கிறதா விசு? கூடங்குளம் திட்டம் பற்றி நாமிருவரும் மட்டும் பொதுவெளியில் ஒரு விவாதம் நடத்துவோமா விசு? வருவீரா? அல்லது நான் வருகிறேன். எங்கே, எப்போது வரவேண்டும் என்று சொல்லும்! வருகிறேன், மக்களோடு நின்று விவாதிப்போம்!
எல்லோரும் படிக்க வேண்டும், எல்லோருக்கும் சமவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றெல்லாம் அற்புதமான சமூகநீதி பேசும் இந்த நவீன சினிமாப் பெரியார், எல்லா மனிதர்களையும் சமமாக நடத்தாத பார்ப்பனீயத்தின் கையாளாக வேலை பார்த்தவாறே அதைச் செய்வதுதான் வேடிக்கை. இதையெல்லாம் சாமர்த்தியமாக மறைப்பது போன்று நடித்து தோற்கிறார், பாவம்!
"புதுசா ஒரு கான்சப்ட் வந்திருக்கு, அது ஏன் வந்திருக்குன்னு எவ்வளவு தூரம் யோசிச்சுப் பார்த்தாலும், அது ஏன்னு எனக்குக் காரணம் புரியல" என்று தனது அறியாமையை ஒத்துக் கொள்கிறார் விசு. இது புரிவதற்கு முதலில் இதயம் வேண்டும் விசு, அதில் கொஞ்சம் உண்மை வேண்டும், கூடவே சொந்தமாக சிந்திக்கும் திறன் வேண்டும். உதட்டளவில் மட்டுமல்ல, உள்ளுக்குள்ளும் அனைத்து மனிதர்களையும் சமமாக நடத்தும் தத்துவார்த்தப் பார்வை, நேர்மை, கருணை வேண்டும்.
கூலிக்கு மாரடித்தே பழகிப் போய்விட்ட உம்மிடம் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியாதுதான். நடித்தே வாழ்க்கையைக் கழித்தாயிற்று, நன்கு சம்பாதித்தாயிற்று, இனி ஓய்வெடுங்கள் விசு, இந்தத் தள்ளாத வயதில் விபரீத சமூக-பொருளாதார-அரசியல் பரிசோதனைகள் வேண்டாம். உடல்நலம் வேறு நன்றாக இல்லாதது போல் தோன்றுகிறது!
கடைசியாக, காணொளியில் என் பெயரை நீக்கிவிட்டு, வருத்தம் தெரிவியுங்கள். அல்லது எங்காவது போலீஸ் ஸ்டேஷனில் அல்லது கோர்ட்டில் நேரில் சந்திப்போம்.’ இவ்வாறு சுப.உதயகுமாரன் கூறியிருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.