ராமசாமி படையாட்சி, சிவாஜி கணேசன் ஆகியோரது பிறந்த நாள் விழாக்களை அரசு விழாவாக கொண்டாடப்படும் என சட்டமன்றத்தில் முதல்வர் அறிவித்தார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். சட்டமன்ற நிகழ்வுகள் தொடர்பான ஹைலைட்ஸ் இவை:
தமிழ்நாடு சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ் வருவாய், பேரிடர் மேலாண்மை துறையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. சென்னை மெரினாவில் பேரறிஞர் அண்ணா நினைவிடம் ரூ 4 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.
சென்னையில் அடையாறு, கூவம் ஆறு பகுதிகளில் வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இணைப்புக் கால்வாய், மூடிய கால்வாய்களை பராமரித்தல் மற்றும் உபரி நீர் கால்வாய்கள் இந்த நிதி மூலமாக ஏற்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்தார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திரையுலக சாதனைகளையும் அவர் பெற்ற விருதுகளையும் பட்டியலிட்டுப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவரது பிறந்த நாளான அக்டோபர் 1-ம் தேதியன்று அரசு விழாவாக கொண்டாட இருப்பதாக அறிவித்தார்.
இதேபோல விடுதலைப் போராட்டத் தியாகியான ராமசாமி படையாட்சியின் பிறந்தநாள் செப்டம்பர் 16 அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.
இன்று சட்டமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ‘ஐஜி பொன்மாணிக்க வேலிடம் அனைத்து சிலை வழக்குகளையும் கொடுக்காதது ஏன்? அரசு உதவவில்லை என ஐஜி கூறியது ஏன்?’ என கேள்வி எழுப்பினார்.
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்கையில், ‘நானும் தெய்வ பக்தி உடையவன். ஐஜி பொன்மாணிக்கவேல் கேட்டப்படி 320 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ என்றார்.
‘பள்ளி பாடப் புத்தகங்களில் ஆண்டுகளை குறிப்பிடும்போது கி.மு, கி.பி என்று வழக்கத்தில் உள்ள முறைக்கு பதிலாக பொ.ஆ.மு, பொ.ஆ.பி (பொது ஆண்டுக்கு முன், பின்) என்று மாற்றுவது வரலாற்று பிழையாகிவிடும்’ என ராதாபுரம் எம்.எல்.ஏ. இன்பதுரை குறிப்பிட்டார். அதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளிக்கையில், ‘கி.மு, கி.பி என்ற பழைய முறையே தொடரும்’ என்றார்.
சிவாஜி கணேசன் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்த அரசுக்கு நடிகர் பிரபு நன்றி கூறியிருக்கிறார். ‘லட்சோப லட்சம் ரசிகர்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக’ சிவாஜி சமூக நலப் பேரவை தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.