எச். ராஜா மற்றும் எஸ்.வி.சேகர் : ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல

சமீபத்தில் பெண் நிருபரின் கேள்வியை புறக்கணிக்கக் கன்னத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தட்டிக்கொடுத்த விவகாரத்தில் எச். ராஜாவுக்கு அடுத்தபடியாக எஸ்.வி.சேகரின் ஆபாச முகநூல் பதிவு பத்திரிக்கையாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில், கவர்நரின் பெயர் ஈடுபட்டிருந்ததால் இதனை தெளிவுபடுத்தும் வகையில், கடந்த 17ம் தேதி கவர்நர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். அந்தச் சந்திப்பின் முடிவில், பெண் நிருபர் அவரிடம் கேள்வி கேட்டுள்ளார். பதிலளிக்க விருப்பமில்லை என்றால் ஆளுநர் கேள்வியை புறக்கணித்திருக்கலாம். ஆனால் கேள்வி கேட்கும் பெண் நிருபரின் கன்னத்தைத் தட்டிக்கொடுத்து கன்னியம் தவறிய செயலில் ஈடுபட்டார். இதனைக் கண்டித்து அப்பெண் நிருபர், தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.

இத்தகைய செயலில் ஈடுபட்ட புரோஹித்திற்கு, பத்திரிக்கையாளர்கள் மட்டுமின்றி ஒரு சில அரசியல் பிரமுகர்களும் கண்டனம் தெரிவித்தனர். இதன் விளைவாக மறுநாள் ஆளுநர் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். ஒரு மாநிலத்தின் ஆளுநராக இருந்துகொண்டு, ஒரு பெண்ணிடம் இவ்வாறு நடப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்று கடும் எதிர்ப்புகளும் எழுந்தன. மேலும் ஒருவரின் அனுமதியில்லாமல், அவரை தொட்டுப் பேசுவது எதிர்க்கக் கூடிய செயல் என்பதை ஆளுநர் மறந்துவிட்டாரா என்ற கேள்விகளையும் பலர் எழுப்பியுள்ளனர்.

இதுபோன்ற எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், புரோஹித்தின் செயலுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர் சில பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள். ஒரு தாத்தா பேத்தியைத் தட்டிக்கொடுப்பது போலவே அவர் நடந்துகொண்டார் இதில் என்ன இருக்கிறது என்று, சிலர் இந்த தவறை நியாயப்படுத்தியும் வருகின்றனர். இது போன்ற ஆதரவுகளைத் தந்து, பெண்களுக்கு எதிராகப் பதிவுகள் பகிர்வதில் முன்னுதாரணமாக இருக்கிறது பாஜக.

இந்த விவகாரத்தில், அப்பெண் நிருபருக்கு ஆதரவாக திமுகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்தக் கண்டனத்தை எதிர்த்து பாஜகவை சேர்ந்த எச்.ராஜா கருத்து பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில் வெறுக்கத்தக்க வார்த்தைகள் கொண்டு கனிமொழியைத் தாக்கியிருந்தார். கன்னத்தைத் தட்டினால் பெண் வாயை மூடிவிடலாம், அதுபோல ஒரு பெண்ணை இணையத்தில் தவறாக சித்தரித்தால் அமைதியாக இருந்து விடுவார்கள் என்று நினைப்பதை எடுத்துக்காட்டும் வகையில் பாஜகவின் செயல்கள் இருந்து வருகிறது.

எச். ராஜாவின் முறைக்கெட்ட பதிவை, பலரும் வன்மையாகக் கண்டித்தனர்.

பெண்களுக்கு எதிரான ஆபாச பதிவுகளில் எச். ராஜாவுக்கு சளைத்தவர் அல்ல எஸ்.வி.சேகர் என்பதை நிரூபித்திருக்கிறார். இவர் தனது முகநூல் பக்கத்தில், தமிழக பத்திரிக்கையாளர்களுக்கு எதிராகப் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அந்தப் பதிவில், பத்திரிக்கையாளர்களை ஆபாசமாக சித்தரித்தும் மிகவும் கொச்சையான வார்த்தைகளை உபயோகித்தும் பகிர்ந்திருந்தார். படித்த உனடே முகம் சுலிக்கும் அளவிற்கு உள்ளது அந்தப் பதிவு.

S.V.SEKAR

இது குறித்து கேட்டபோது, சமீபத்தில் அமெரிக்காவில் திருமலை என்ற ஒருவரைச் சந்தித்ததாகவும், அவர் மோடியின் தீவிர ஆதரவாளர் என்றும், திருமலையின் பதிவையே தான் பகிர்ந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் தனது முகநூல் பக்கம் முடங்கியுள்ளதால், அந்தப் பதிவை இன்னும் 24 மணி நேரங்களுக்கு நீக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். குறிப்பாகத் தான் அந்தப் பதிவை முழுமையாகப் படிக்காமல் பகிர்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தச் செயல் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் இருந்த வந்த கோபத்தை மேலும் அதிகரித்துள்ளது. ஒரு பதிவை பகிர்வதற்கு முன்னர் என்ன தகவல் உள்ளது என்பதைக் கூட பார்க்காமல் ஒருவர் எப்படிப் பகிர்ந்திருக்க முடியும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆளுநர் என்ன செய்தாலும் கண்மூடித்தனமாக ஆதரிக்கும் மனோபாவத்தையே இச்செயல் குறிக்கிறது.

செய்தியாளர்களுக்கு எதிராக இது போன்ற இழிவான செயல்களில் ஈடுபட்டு வரும், பாஜகவினரை கண்டித்து இன்று மதியம் 3 மணிக்குச் சென்னை பாஜக அலுவலகம் முன்பு பத்திரிக்கையாளர்கள் கண்டன போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

நாட்டை ஆளும் பாஜக கட்சியினர், இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில் பெண்கள் பாதுகாப்பு உள்ளது என்று அவர்கள் கூறுவது ஏற்புடையதாக இல்லை என்ற எதிர்ப்பு கருத்துகள் எழுந்து வருகின்றன.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close