பெண் பத்திரிகையாளர்கள்களுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவித்த வழக்கில் முன் ஜாமின் கோரி நடிகர் எஸ்.வி சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நடிகர் மற்றும் பா.ஜனதா கட்சியின் பிரமுகருமான எஸ்.வி.சேகர், தனது முகநூல் பக்கத்தில் பெண் நிருபர்கள் குறித்து தரக்குறைவாக ஒரு பதிவை கடந்த வாரம் வெளியிட்டார். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்ததால் உடனடியாக அந்த பதிவை அவர் நீக்கி விட்டார். ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் எஸ்.வி. சேகருக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்த நிலையில் தமது கருத்துக்காக எஸ்.வி சேகர் மன்னிப்பு கோரியுள்ளார். மன வருத்தம் ஏற்பட்டுள்ள பத்திரிகை சகோதரிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில், எஸ்.வி. சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையில் தமிழ்நாடு பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கத்தினரின் சார்பில் பத்திரிக்கையாளர் மித்தார் புகார் அளித்தார். இந்த புகாரில் எஸ்.வி.சேகர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் மனு தாக்கல். செய்துள்ளார். அந்த மனுவில், பெண்ணினத்தை தவறான எண்ணத்தில் குறிக்கும் வகையில், குறிப்பாக பத்திரிக்கையாளர் சமூகத்தையோ அவமதிக்கும் உள்நோக்கமோ, குற்ற எணண்ணமோ எள்ளளவும் எனக்கு கிடையாது. சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகளை பொதுத்தளத்தில் பகிர்வது என்ற பழக்கத்தில் பேரில், எனக்கு வந்த செய்தியை பார்வேடு (forward) செய்தேன். சம்பந்தப்பட்ட செய்தியையும் பார்வேடு (forward) செய்ததை தவிர வேறு எந்த தவறும் செய்யவில்லை. எனவே தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் இதற்காக நீதிமன்றம் விதிக்கின்றன நிபந்தனைகளை ஏற்க தயாராக உள்ளேன் எனவே முன் ஜாமின் வழங்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.