S.Ve.Shekher Interview: ஜனார்தன் கெளசிக்
எஸ்.வி.சேகர், பரபரப்புக்கு பஞ்சம் இல்லாதவர்! பாஜக உறுப்பினரும், திரைப்பட பிரபலமும் ஆன அவர் கடந்த ஏப்ரல் மாதம் பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக சித்தரித்ததாக சர்ச்சையில் சிக்கினார். அவர் மீது கிரிமினல் வழக்கும் பதிவானது.
எஸ்.வி.சேகர் பின்னர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். லேட்டஸ்டாக கருணாஸ் கைதை தொடர்ந்தும், ‘எஸ்.வி.சேகரை ஏன் போலீஸ் கைது செய்யவில்லை?’ என்கிற கேள்விதான் தமிழ்நாடு முழுவதும் ஒலித்தது.
சர்ச்சைகளின் நாயகரான எஸ்.வி.சேகரை tamil.indianexpress.com -க்காக சென்னையில் சந்தித்தோம். அவரது பிரத்யேக பேட்டி இதோ :
கருணாஸ் கைது குறித்து உங்கள் கருத்து என்ன?
தமிழ்நாட்டையும், சர்ச்சைகளையும் பிரிக்க முடியாது. ஆனால், எதுவாக இருந்தாலும் அதன் ஆயுள் ஒரு வாரத்திற்கு தான். முதலில் எனது சம்பவம், பிறகு ஹெச்.ராஜா, இப்போது கருணாஸ். நம்முடைய கருத்தை வெளிப்படுத்த நமக்கு முழு சுதந்திரம் உண்டு. ஆனால், அது மற்றவர்களை வேதனைப்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். கருணாஸ் விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. எனவே, அதைப் பற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை.
பத்திரிக்கையாளர்களும், அரசியல்வாதிகளும் உங்களை கைது செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். சட்டத்தை உங்கள் செல்வாக்கு மூலம் சரி செய்வதாக சொல்கிறார்களே?
ஒரு பதிவை படிக்காமல் நான் ஷேர் செய்துவிட்டேன். அதற்கு மன்னிப்பும் கேட்டுவிட்டேன். வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டால், போலீஸ் அந்த நபரை கைது செய்ய முடியாது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். என்னை கைது செய்ய வேண்டும் என்று புலம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த அடிப்படை விஷயம் கூட தெரியவில்லையே என்று நினைக்கும் போதுதான் மிகவும் வருத்தமாக உள்ளது.
வெவ்வேறு கட்சிகளில் இருந்திருக்கிறீர்கள். இப்போது தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுடன் பனிப்போர் நடத்துவது போன்று தோன்றுகிறதே?
முன்பு நான் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டேன் ஏனென்றால் நான் நேர்மையாக இருந்தேன். நான் அதை பற்றி கவலைபடவில்லை; காரணம், மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலிலதாவுடன் நான் இணக்கமாக தான் இருந்தேன், என் உழைப்பை பற்றி அவருக்கு தெரியும்.
நான் காங்கிரஸில் இரண்டு மாதம் தான் இருந்தேன், அதுவும் ராகுல் காந்தி என்னை அழைத்தார் என்பதற்காக. அவர் என்னை தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைய சொன்னார், நான் எந்த காங்கிரஸ் கட்சியில் இணைவது என்று கேட்டேன்; காரணம் இங்கேயே ஆறு முதல் ஏழு காங்கிரஸ் கட்சிகள் உள்ளன. பிறகு மவுண்ட் ரோட்டில் நடந்த ஏதோ கலவரத்தில், என் பெயரையும் சேர்த்து நீக்கி விட்டார் அப்போதைய தலைவர் தங்கபாலு.
1992 முதல் நான் பாஜகவின் அபிமானி! அப்பொழுது தமிழிசை தலைவர் இல்லை. பாஜகவில் 2010 முதல் நான் தொடர்ந்து உள்ளேன். எனக்கு கட்சி தலைமை பொறுப்பு தந்தால் கண்டிப்பாக ஏற்று கொள்வேன்.
ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் உங்களுடைய நெருங்கிய தோழர்கள். அவர்களுடைய அரசியல் பயணம் பற்றி உங்கள் கருத்து?
ஆம், இரண்டு பெரும் இன்று வரைக்கும் எனக்கு நண்பர்கள் தான். நான் தான் ரஜினியின் குரலை முதன் முதலில் ஆல் இந்திய ரேடியோவில் பிரபலப்படுத்தினேன். அவருடைய அபூர்வ ராகங்கள் திரைப்படம் வெளி வந்த சமயம் அது. அந்த காலத்தில் கமலும் நானும் SAFIRE தியேட்டரில் ஒன்றாக திரைப்படம் பார்க்க செல்வது வழக்கம். அவர்களுடைய அரசியல் பயணம் பற்றி கூறவேண்டும் என்றால், பாஜக அவர்களை எதிர்த்தால் நானும் நிச்சயமாக எதிர்ப்பேன்.
ஆனால், ரஜினிக்கு எதிராக நாங்கள் செயல்படுவோம் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால், அவருடைய கொள்கை பாஜகவுடைய கொள்கையை போன்றது. ரஜினி, பாஜக மற்றும் அதிமுக ஒரே கொள்கையை உடையது, அனைவருமே தேசியம் மற்றும் தெய்வீகம் என்று நினைப்பவர்கள்.
ஆனால், கமல் வேறு மாதிரி. அவர் கேரளாவிற்கு என்றால் உதவி செய்வார். தமிழ்நாட்டில் வெள்ளம் வந்த பொழுது நான் எதற்கு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டவர் தானே அவர்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது மக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். அது பாஜகவின் சிறந்த முடிவு என்று இப்பொழுதும் நீங்கள் எண்ணுகிறீர்களா?
கண்டிப்பாக. Demonetization காரணமாக ஒரு டீ கடை மூடியது என்று சொல்லுங்கள். பதுக்கி வைத்து செயல்படுவர்களுக்கு தான் அது பாதிப்பை ஏற்படுத்தியது. Demonetization நம் தலை சிறந்த பாரத பிரதமரால் கொண்டு வரப்பட்ட தலைசிறந்த திட்டம்.
தமிழ்நாட்டில் 2019 தேர்தலில் பாஜக எந்த மாதிரியான திட்டத்தை வகுக்கும்?
பாஜக வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் மட்டுமல்ல 2024 தேர்தலிலும் வெற்றி பெரும். அப்படியா ! என்று கேட்பவர்கள் ஐஸ் வாட்டர் குடித்துவிட்டு தூங்கலாம். தமிழ்நாட்டில் 10-14 சதவீத ஓட்டுக்கள் பாஜகவிற்கு சாதமாக இருக்கும்.
நீங்களும் விஷாலும் இணைந்து செயல்படுவீர்களா? விஷால் கட்சி தொடங்கினால் நீங்கள் அதில் இணைவீர்களா?
நான் கடைசிவரை பாஜகவில் மட்டும் தான் இருப்பேன். நான் மோடியின் அபிமானி. நான் தனியாக கட்சி தொடங்கினாலே பத்து லட்சம் பிராமணர்கள் என்னுடன் இணைவார்கள், நான் எதற்கு விஷாலுடன் இணைய வேண்டும்? அந்த மாதிரி சூழ்நிலை வந்தால் நான் அரசியலை விட்டே வெளியேறிவிடுவேன்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.