எஸ்.வி.சேகர் தலை மறைவாகவில்லை : மத்திய அமைச்சர் பொன்னாருடன் நிகழ்ச்சியில் பங்கேற்பு

‘எஸ்.வி.சேகரை அந்த நிகழ்ச்சியில் சந்தித்தது உண்மைதான். அவரை கைது செய்ய வேண்டியது போலீஸாரின் வேலை’

எஸ்.வி.சேகர் தலைமறைவு ஆகிவிட்டதாக ஊரே பேசிக்கொண்டிருக்க, அவரோ கூலாக மத்திய அமைச்சர் பொன்னாருடன் ஒரு விழாவில் கலந்துகொண்டார்.

எஸ்.வி.சேகர், இன்றைய தேதியில் தமிழக போலீஸாரால் தேடப்படும் ஒரு நபர்! தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர் ஒருவரின் கன்னத்தில் தட்டிய விவகாரம் சர்ச்சை ஆனது. அந்தப் பெண் பத்திரிகையாளர் உள்பட பலரும் ஆளுனரின் செயலை கண்டித்தனர். ஆளுனரும் கடிதம் மூலமாக மேற்படி பெண் பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கோரினார்.

எஸ்.வி.சேகர் இந்த விவகாரத்தில் சம்பந்தம் இல்லாமல், பத்திரிகையாளர்களின் சுய ஒழுக்கத்தை கேள்விக்குள்ளாக்கி தனது முகநூல் பக்கத்தில் கருத்தை பகிர்ந்தார். இது தொடர்பாக பெண் பத்திரிகையாளர்கள் உள்பட பலரும் போலீஸில் புகார் கொடுத்தனர். பெண்கள் வன்கொடுமை வழக்கில் எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு செய்து சில வாரங்கள் ஆகிவிட்டன.

எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், எஸ்.வி.சேகரின் முகநூல் பதிவு தொடர்பாக கடுமையான கருத்துகளையும் கூறியது. ஆனாலும் தமிழ்நாடு போலீஸார் இதுவரை எஸ்.வி.சேகரை கைது செய்யவில்லை. பாஜக.வில் இருந்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக சம்பவம் நடந்தபோதே கூறிய தமிழிசை செளந்தரராஜன், இரு தினங்களுக்கு முன்பும் அதே கருத்தை மீண்டும் கூறியிருக்கிறார்.

அமைச்சர் ஜெயகுமாரிடம் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய போதெல்லாம், ‘எஸ்.வி.சேகர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கையை போலீஸ் எடுக்கும்’ என கூறி வந்திருக்கிறார். ஆனால் உயர் நீதிமன்றத்தால் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட பிறகும் எஸ்.வி.சேகர், சுதந்திரமாக சென்னையை சுற்றி வருவதாக இப்போது தெரிய வந்திருக்கிறது.

சென்னையில் நேற்று முன்தினம் நடந்த இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் தலைவர் தேவநாதன் யாதவ் பிறந்தநாள் விழாவில் எஸ்.வி.சேகர் கலந்துகொண்டு இருக்கிறார். இந்த விழாவில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பா.ஜ.க. பிரமுகர்கள் பங்கேற்றனர். அவர்களுடன் எஸ்.வி.சேகர் சிரித்து பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

போலீசார் தேடி வரும் நிலையில் எஸ்.வி.சேகர், மத்திய அமைச்சர் கலந்துகொண்ட விழாவில் பங்கேற்றிருப்பது மீண்டும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. இது குறித்து விழுப்புரத்தில் மத்திய அமைச்சர் பொன்னாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘எஸ்.வி.சேகரை அந்த நிகழ்ச்சியில் சந்தித்தது உண்மைதான். அவரை கைது செய்ய வேண்டியது போலீஸாரின் வேலை’ என குறிப்பிட்டார்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close