எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் கேட்ட வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய போலீஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
எஸ்.வி.சேகர், தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவித்தது கண்டனத்திற்கு உள்ளானது. இது தொடர்பாக அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதன் அடிப்படையில் எஸ்.வி.சேகர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
எஸ்.வி.சேகர் மேற்படி வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
எஸ்.வி.சேகர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது : ‘பெண்ணினத்தை தவறான எண்ணத்தில் குறிக்கும் வகையில், குறிப்பாக பத்திரிக்கையாளர் சமூகத்தையோ அவமதிக்கும் உள்நோக்கமோ, குற்ற எண்ணமோ எள்ளளவும் எனக்கு கிடையாது. சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகளை பொதுத்தளத்தில் பகிர்வது என்ற பழக்கத்தில் பேரில், எனக்கு வந்த செய்தியை பார்வேடு (forward) செய்தேன்.
சம்பந்தப்பட்ட செய்தியையும் பார்வேடு (forward) செய்ததை தவிர வேறு எந்த தவறும் செய்யவில்லை. எனவே தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும். இதற்காக நீதிமன்றம் விதிக்கின்ற நிபந்தனைகளை ஏற்க தயாராக உள்ளேன். எனவே முன் ஜாமின் வழங்க வேண்டும்’ என மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு இன்று நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது புகார் அளித்த பத்திரிக்கையாளர் சங்கம், உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர், தமிழ்நாடு மகிளா காங்கிரஸ், பத்திரிக்கையாளர்கள், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம், பெண் வழக்கறிஞர்கள் உள்பட 10 சங்கம் மற்றும் தனிநபர்கள் சார்பில் முன் ஜாமின் வழங்க எதிர்ப்பு மனு தாக்கல் செய்தனர். மேலும் முன் ஜாமின்
வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனு தொடர்பாக பதில் அளிக்க கால அவகாசம் தேவை என்றார். இதனையடுத்து வழக்கின் விசாரணை வரும் சனிக்கிழமை தள்ளிவைத்த நீதிபதி மனு தொடர்பாக பதில் அளிக்க மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.