Advertisment

'போதை வஸ்து நிறைந்த படங்கள்; விஜய் மன்னிப்பு கேட்கணும்': பால் முகவர்கள் சங்கத் தலைவர் கடிதம்

"இளம் தலைமுறையினரின் சீரழிவிற்கு போதை வஸ்துகளின் காட்சிகள் கொண்ட திரைப்படங்கள் பிரதான காரணம் என்பதால் நடிகர் விஜய் அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்." என்று பால் முகவர்கள் சங்க நிறுவனத் தலைவர் பகிரங்க கடிதம் எழுதியுள்ளார்.

author-image
WebDesk
New Update
SA Ponnusamy president of Milk Agents Welfare Association letter to actor TVK leader vijay Tamil News
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இளம் தலைமுறையினரின் சீரழிவிற்கு போதை வஸ்துகளின் காட்சிகள் கொண்ட திரைப்படங்கள் பிரதான  காரணம் என்றும், அதற்கு நடிகர் விஜய்பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கடிதம் எழுதியுள்ளார். 

Advertisment

இதுகுறித்து அந்த கடித்ததில் கூறியுள்ளது பின்வருமாறு:- 

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரும், தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்களுள் ஒருவருமான விஜய்க்கு வணக்கம். தமிழ்நாடு முழுவதும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில்  அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியரை பாராட்டி அவர்களை ஊக்குவிக்கும் விதமாக சென்னைக்கு வரவழைத்து மாபெரும் விழா எடுத்து, விழா மேடையில் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, ஊக்கத்தொகை வழங்கி கெளரவிக்கும் விதமாக கடந்தாண்டு முதல் அதற்கான விழாவினை முன்னெடுத்து மற்ற நடிகர்களுக்கு முன்மாதிரியாக செயல்பட்டு வரும் தங்களின் இந்த செயல்பாட்டினை முன்னெடுத்து வரும் தங்களுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் மனதார பாராட்டி, வாழ்த்தி வரவேற்கிறது.

அந்த வகையில், கடந்த 2023-2024 ஆம் கல்வியாண்டில் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 21மாவட்டங்களைச் சேர்ந்த தொகுதி வாரியாக மூன்று பேர் வீதம் சுமார் 800 மாணவ, மாணவியரை தேர்வு செய்து நேற்றைய தினம் சென்னைக்கு வரவழைத்து அவர்களுக்கு விழா மேடையில் பொன்னாடை அணிவித்து கெளரவப்படுத்தி ஊக்கத்தொகையும், பரிசுகளும் வழங்கி பாராட்டியுள்ளீர்கள், அதன் தொடர்ச்சியாக விடுபட்ட மாவட்டங்களில் உள்ள தொகுதி வாரியாக தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியரை  இன்று நடைபெறும் விழாவில் கெளரவித்து பாராட்டு தெரிவிக்க இருக்கும் தங்களுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

மேலும் நேற்று நடைபெற்ற விழா மேடையில் மாணவ, மாணவியர் முன்னிலையில் தாங்கள் பேசும் போது 'தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் போதை கலாச்சாரம் அதிகரித்து வருவது பெற்றோராகவும், அரசியல் கட்சித் தலைவராகவும் அச்சம் ஊட்டுகிறது' என கவலைப்பட்டு பேசியிருப்பது "ஆடு நனைவதாக ஓநாய் அழுத கதை" என்கிற பழமொழியை நினைவூட்டுவதாக தங்களின் பேச்சு அமைந்திருக்கிறது.

ஏனெனில் தங்களின் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்களில் மது, சிகரெட் உள்ளிட்ட போதை வஸ்துகள் பயன்படுத்தும் காட்சிகளும், துப்பாக்கி, கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அடிதடி, வெட்டு, குத்து, ரத்தம் போன்ற வன்முறை காட்சிகளும் இல்லாமல் இருந்ததில்லை. மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் பேராசிரியர் கதாபாத்திரத்தில் தாங்கள் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் ஆரம்ப காட்சியிலேயே தாங்கள் போதையில் மட்டையாகி படுத்திருக்கும் காட்சியமைப்பு இருக்கும். அதுமட்டுமின்றி சமீபத்தில் வெளியான லியோ திரைப்படத்தில் கூட மது, சிகரெட் குடிக்கும் காட்சிகள் இருந்தது.

அது உங்கள் தொழில் சார்ந்த நடிப்பு தான் என்றாலும் கூட அது போன்ற காட்சிகள் இளம் பிஞ்சுகள் மனதில் தங்களின் ஆதர்ஷ நாயகனின் நடிப்பு அப்படியே பசுமரத்தாணி போல் ஆழப்பதிந்து அவர்களின் வளர்பருவத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான குடிநோயாளிகளாக மாறிப் போகின்றனர்.

அப்படி பார்க்கும் போது திரைப்படங்களில் மது, சிகரெட் குடிப்பவர்களாக, வன்முறையில் ஈடுபடும் ரவுடிகளாக நடிக்கும் தங்களைப் போன்ற நடிகர்களுக்கும், டாஸ்மாக் எனும் பெயரில் மதுக்கடைகளை திறந்து வைத்து சாராய வியாபாரம் செய்யும் ஆட்சியாளர்களுக்கும், திருட்டுத்தனமாக சாராயம் காய்ச்சி கள்ளச்சாராயம், விஷசாராயம் விற்பனை செய்யும் சமூக விரோதிகளுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.

இன்னும் சொல்லப்போனால் மதுக்கடைகளை திறந்து வைத்து சாராயத்தை விற்பனை செய்யும் அரசுக்கும், திருட்டுத்தனமாக சாராயம் காய்ச்சி கள்ளச்சாராயம், விஷசாராயத்தை விற்பனை செய்யும் சமூக விரோதிகளுக்கும் உங்களைப் போன்ற நடிகர்கள் தான் விளம்பர தூதுவர்கள் என்றால் அது மிகையாகாது.

ஏனெனில் போதை வஸ்துகளை சட்டத்திற்குட்பட்டோ அல்லது சட்டத்திற்கு புறம்பாகவோ விற்பனை செய்பவர்களை விட இளம் தலைமுறையினர் மனதில் மது, சிகரெட், வன்முறை போன்ற நஞ்சை விதைக்கும் உங்களைப் போன்றோர் தான் முதல் குற்றவாளிகள்.

எனவே இளம் பிஞ்சுகள் மனதில் நஞ்சை விதைத்து தமிழகத்தில் போதை கலாச்சாரமும், குடிநோயாளிகளும் பெருக காரணமான அது போன்ற காட்சியமைப்பு கொண்ட பல படங்களில் நடித்த தாங்கள் தற்போது மாணவர்கள் மத்தியில் பேசும் போது அது போன்ற காட்சிகளில் நடித்தமைக்காக எந்த ஒரு குற்ற உணர்வும் இல்லாமல், சிறுதுளி கூட வருத்தப்பட்டு, மாணவர்கள் மத்தியில் மன்னிப்பு கேட்காமல் பேசியது ஏற்கனவே ஆண்ட, தற்போது ஆளுகின்ற கழக தலைவர்களுக்கும் தங்களுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என்பதை உணர்த்துவதாக இருக்கிறது. 

மேலும் தற்போது கூட இதை தங்களுக்கு நினைவூட்டுவதற்கு காரணம் தமிழ்நாட்டில் மது, புகையிலை, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதை வஸ்துகள் பயன்பாடு இளைஞர்கள் மத்தியில் மட்டுமின்றி பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர் மத்தியிலும் பெரிதளவில் பரவக் காரணம் சமூக விரோதிகளின் விற்பனை, காவல்துறை உள்ளிட்ட அரசு நிர்வாகத்தில் புற்றுநோய் போல புரையோடிப்போன ஊழல் அதிகாரிகள் என்பதைக் கடந்து தங்களைப் போன்ற முன்னணி நடிகர்கள் மது குடிப்பது, சிகரெட் புகைப்பது, கஞ்சா அடிப்பது போல் நடிப்பது தான் இன்றைய இளம் தலைமுறையினரின் சீரழிவிற்கு 100% காரணமாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.

ஏனெனில் தங்களைப் போன்ற நடிகர்கள் திரையில் நடிப்பதையே நிஜமென்று நம்பி அதனை அப்படியே பின்பற்றத் துடிக்கும் இளம் தலைமுறையினரில் லட்சக்கணக்கானோர்  தங்களின் நடை, உடை, பாவனையை அப்படியே பின்பற்றுகின்றனர் என்பதை மறுக்க முடியாது. அதனாலேயே தங்களைப் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் சமயங்களில் எல்லாம் திரையரங்க வளாகங்களில் வைக்கப்படும் நூறடிக்கும் உயரமான கட்அவுட்டுகள் மீது ஆபத்தை உணராமல் மேலேறிச் சென்று அந்த உயிரற்ற கட்அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்து, மாலை அணிவித்து, கற்பூர ஆரத்தி காண்பித்து கடவுளாக நினைத்துக் கொண்டு வழிபாடு செய்யும் மூடத்தனத்தை தடுத்து நிறுத்தி, மாபெரும் சக்தியான இளைய சமுதாயத்தை நல்வழிப்படுத்தும் பொறுப்பும், கடமையும் ஒவ்வொரு நடிகர்களுக்கும் இருக்கிறது என்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடந்த 10ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது. அதுகுறித்த கடிதங்களையும் தங்களுக்கும், தங்களைப் போன்ற முன்னணி நடிகர்களுக்கு எழுதியுள்ளதோடு மட்டுமின்றி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நேரில் சென்று அதன் உறுப்பினர்களாக உள்ள நடிகர், நடிகையருக்கு தெரிவிக்க கேட்டுக் கொண்டுள்ளது.

ஆனால் "நாய் விற்ற காசு குறைக்காது" என்கிற அடிப்படையில் தங்களின் செயல்பாடுகளை மாற்றிக் கொள்ளாமல் இருந்து விட்டு, அப்போதெல்லாம் அது குறித்து பெரியளவில் எதிர்வினையாற்றாமல் ரசிகர்கள் எனும் மாபெரும் சக்தியை நல்வழிப்படுத்தும் கடமையை, பொறுப்பை தட்டிக் கழித்து விட்டு, தொடர்ந்து தங்களின் படங்களில் மது, சிகரெட் உள்ளிட்ட போதை வஸ்துகளின் பயன்பாட்டு காட்சிகளில் நடித்து விட்டு, தற்போது அரசியல் கட்சி தொடங்கியதும் திடீர் ஞானோதயம் வந்தவராக "தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் போதை கலாச்சாரம் அதிகரித்து வருவது பெற்றோராகவும், அரசியல் கட்சித் தலைவராகவும் அச்சம் ஊட்டுகிறது" என இளைய சமுதாயம் குறித்து கவலைப்படுவது ஏற்கனவே சொன்னது போல் "ஆடு நனைவதாக ஓநாய் அழுத கதை" என்கிற பழமொழியை நினைவூட்டுவதாக அமைந்திருக்கிறது.

எனவே, இன்று நடைபெற உள்ள மாணவ, மாணவியருக்கான கல்வி விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழாவிலோ அல்லது பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தியோ தாங்கள் இதுவரை தங்களின் திரைப்படங்களில் மது, சிகரெட் குடிப்பவராக, போதை வஸ்துகள் பயன்படுத்துபவராக நடித்தமைக்காக, தற்போதைய இளம் தலைமுறையினர் தடம்புரள ஒரு காரணமாக அமைந்ததற்காக அடுத்த தலைமுறையான இன்றைய மாணவ, மாணவியர் முன்னிலையில் பகிரங்க மன்னிப்பு கேட்டு விட்டு தங்களின் அரசியல் பயணத்தைத் தொடருமாறு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம், ஒருவேளை தாங்கள் பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்பதை தவிர்க்கும் பட்சத்தில் நேற்று நடைபெற்ற விழா மேடையில் மாணவ, மாணவியர் முன்னிலையில் இளம் தலைமுறையினரின் போதை கலாச்சாரம் குறித்து பேசியதும் ஒரு நடிப்பு தான், அது தங்களின் கட்சிக்கான, அரசியல் பயணத்திற்கான 100% அரசியல் நாடகம் தான் என்பது உண்மையாகிப் போகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இளம் தலைமுறையினர் மத்தியில் போதை வஸ்துகளின் பயன்பாடு, கலாச்சாரம் ஒழிய அல்லது ஒழிக்க தங்களின் பகிரங்க மன்னிப்பு மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகவும், உந்து சக்தியாகவும் மாறும். 

நீங்கள் இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாகி,  உந்து சக்தியாக நிகழப் போகிறீர்களா..? இல்லை ஏமாற்று கழக அரசியல்வாதிகள் போல் ஆகப் போகிறீர்களா..? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Actor Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment