Advertisment

பால் வளத்துறை அமைச்சரா? பொய் வளத்துறை அமைச்சரா? பால் முகவர்கள் சங்கம் கடும் சாடல்

"மனோ தங்கராஜ் அவர்கள் பால்வளத்துறை அமைச்சரா? இல்லை பொய்வளத்துறை அமைச்சரா?" என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

author-image
WebDesk
New Update
SA Ponnusamy president of Milk Agents Welfare Association questions TN minister mano thangaraj Tamil News

"மனோ தங்கராஜ் அவர்கள் பால்வளத்துறை அமைச்சரா? இல்லை பொய்வளத்துறை அமைச்சரா?, கலைஞர் போல் சாட்டையை சுழற்றுவாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?" என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

Advertisment

இது தொடர்பாக சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:- 

ஆவின் பால் விற்பனை தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் தொடர்ந்து தவறான, முன்னுக்குப்பின் முரணான புள்ளி விவரங்களையும் தெரிவித்து வருவது "கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள்" என்கிற பழமொழியை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. 

ஏனெனில், கடந்த ஜூன் 19ம் தேதி சென்னை, நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்களுடனான கலந்தாய்வு கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, ஆவின் பால் விற்பனை  கடந்த ஆண்டை விட 23% அதிகரித்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

அதன் பிறகு, கடந்த ஜூன்-22ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற பால் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அவர் தாக்கல் செய்த அரசின் கொள்கை விளக்க குறிப்பிலோ கடைசி இரண்டாண்டுகளில் ஆவின் பால் விற்பனை 3.45% அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த சூழலில் கடந்த ஜூன் 29 ஆம் தேதி கோவையில் பால்வளத்துறை அதிகாரிகளோடு நடத்திய ஆலோசனை கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் "கடந்த ஆண்டை விட ஆவின் பால் விற்பனை 25% அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்."

கடந்த 11 நாட்களுக்குள் ஆவின் பால் விற்பனை உயர்வு தொடர்பாக மூன்றுவிதமான, முன்னுக்குப்பின் முரணான புள்ளி விவரங்களை தெரிவித்து மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசுக்கு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் திட்டமிட்டு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறாரோ? அல்லது "சொல்வதைச் அப்படியே திரும்பச் சொல்லும் கிளிப்பிள்ளை" அதிகாரிகள் எழுதிக் கொடுக்கும் புள்ளி விவரங்களை ஆய்வு செய்யாமல் அப்படியே ஒப்பிக்கிறாரோ? என்கிற சந்தேகம் எழுகிறது. 

ஏனெனில், தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கடந்த மூன்றாண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மானியக் கோரிக்கை மீதான கொள்கை விளக்கக் குறிப்புகளில் உள்ள தரவுகளின் அடிப்படையில் ஆவின் பால் விற்பனை கடந்த 2023-2024  ஆம் நிதியாண்டில் 29.20 லட்சம் லிட்டராக இருந்த நிலையில் 2024-2025 ஆம் நிதியாண்டில் 30.25 லட்சம் லிட்டராக (3.45%) உயர்ந்துள்ளது என தெளிவாக கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

அதனடிப்படையில் 2021-2022 (26.70 லட்சம் லிட்டர்) - 2024-2025 ஆம் (30.25 லட்சம் லிட்டர்) நிதியாண்டுகளோடு ஒப்பிட்டால் கூட ஆவின் பால் விற்பனை 13.29% தான் அதிகரித்துள்ளது. அதுவே கடந்த 2023-2024 (29.13 லட்சம் லிட்டர்) - 2024-2025 ஆம் (30.25லட்சம் லிட்டர்) நிதியாண்டுகளோடு ஒப்பிடுகையில் வெறும் 3.54% தான் ஆவின் பால் விற்பனை அதிகரித்துள்ள உண்மை தெரிய வருகிறது. 

அப்படியானால், கடந்தாண்டை விட தற்போது 23%, 25% ஆவின் பால் விற்பனை அதிகரித்துள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் எப்படி மாற்றி, மாற்றி கதையளக்கிறார் எனத் தெரியவில்லை?

அதுமட்டுமின்றி மனோ தங்கராஜ் அவர்கள் கடந்தாண்டு பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட சில மாதங்களில் ஆவினுக்கான தினசரி பால் கொள்முதலை 40 லட்சம் லிட்டராகவும், பால் கையாளும் திறனை 70 லட்சம் லிட்டராக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

ஆனால், மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்று 14 மாதங்கள் கடந்த நிலையில் அவர் கூறியபடி ஆவினுக்கான பால் கொள்முதலை அதிகரிக்கவோ,  பாலினை கையாளும் திறன் அளவை உயர்த்தவோ அப்படி எந்த ஒரு பெரிய நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது அவர் கடந்த ஜூன் மாதம் சட்டப்பேரவையில் பட்ஜெட் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது தாக்கல் செய்த கொள்கை விளக்கக் குறிப்பு (2022-2023 பால் கொள்முதல் 37.38லட்சம் லிட்டர், பால் கையாளும் திறன் 40.26லட்சம் லிட்டர்), (2023-2024 பால் கொள்முதல் 28.30லட்சம் லிட்டர், பால்  கையாளும் திறன் 43.34லட்சம் லிட்டர்)  உணர்த்துகிறது. 

அதுமட்டுமின்றி, கடந்த அ.தி.மு.க ஆட்சியில் (2019-2020, 2020-2021) பால் கையாளும் திறன் 48.78 லட்சம் லிட்டராக இருந்த நிலையில் தற்போது அது 2024-2025 நிதியாண்டில் 43.34 லட்சம் லிட்டராக குறைந்திருப்பதை அறியாமல் அவர் ஏற்கனவே கூறிய ஆவினுக்கான தினசரி பால் கொள்முதலை 40 லட்சம் லிட்டராகவும், பாலினை கையாளும் திறனை 70லட்சம் லிட்டராக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற அதே பழைய அறிக்கையை  மீண்டும் அச்சுப்பிசகாமல் ஓராண்டு கடந்த நிலையிலும் கூட அப்படியே செய்தியாளர்கள் முன்னிலையில் பள்ளிப் பிள்ளைகள் ஒப்பிப்பது போல் பேசியிருப்பதன் மூலம், ஒருவேளை இந்த உண்மையை யார் கண்டுபிடிக்கப் போகிறார்கள் என்கிற எண்ணத்தில் அமைச்சர் அப்படி பேசினாரா? இல்லை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, தான் அளந்து விடும் பொய்கள் எல்லாம் தெரிந்து கலைஞர் அவர்கள் போல் சாட்டையை சுழற்றவா போகிறார்  என்கிற அசட்டு தைரியமா? என தெரியவில்லை.

இந்த தருணத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த போது அவரது அமைச்சரவையின் ஒவ்வொரு துறை சார்ந்த அமைச்சர்களும் தங்களிடமிருந்து முன்னுக்குப்பின் முரணான, தவறான அறிக்கைகள் வெளியாகி விடக்கூடாது என்பதில் மிகுந்த கவனமுடன் இருந்தனர் என்பதும், அச்சு, காட்சி ஊடகங்களில் அமைச்சர்களின் தவறான அறிக்கைகள் ஏதேனும் வெளியானால் அடுத்த சில மணித்துளிகளிலேயே சம்பந்தப்பட்ட அமைச்சரை நேரில் அழைத்து சரியான புள்ளி விவரங்களோடு அமைச்சர் வெளியிட்ட அறிக்கை தவறென்பதை சுட்டிக் காட்டி அவர்களை லெப்ட்-ரைட் வாங்கி விடுவார் கலைஞர் அவர்கள் என்பதும், அந்தளவிற்கு கலைஞர் அவர்கள் ஒவ்வொரு துறை சார்ந்த தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருந்ததாக கலைஞருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்த தகவல்கள் தற்போது நினைவில் வந்து போவதை தவிர்க்க முடியவில்லை.

ஆனால் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர் பெருமக்கள் என்னதான் தவறான தகவல்களை அறிக்கைகளாக வெளியிட்டாலும், அது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினர் சுட்டிக் காட்டினாலும் கூட முதலமைச்சர் அவர்கள் அமைதியாக கடந்து செல்வதும், அல்லது அமைச்சர்கள் கூறும் பொய் தகவலை உண்மை போல நம்பி பேசுவதும் தான் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் தொடர்ந்து தவறான புள்ளி விவரங்களை வழங்கிட அவருக்கு தைரியத்தை தந்திருக்கிறதோ? என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது.

மேலும், நம் தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள  தனியார் பால் நிறுவனங்கள் பால் உற்பத்தியாளர்களுக்கான பால் கொள்முதல் விலையை கடுமையாக குறைத்து விட்டதால் பால் வரத்து அதிகரித்து பால் பவுடர் ஏற்றுமதி குறைந்து விட்டதால் தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களின் பால் கொள்முதல் விலை தற்போது ஆவின் கொடுப்பதை விட மிகவும் குறைவாக உள்ளது. இதன் காரணமாக தற்போது ஆவினுக்கு பால் கொள்முதல் தானாகவே அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகியும் கூட அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் கூறியபடி இன்று வரை பால் கையாளும் திறன் பல்வேறு மாவட்ட ஒன்றியங்களில் அதிகரிக்கவில்லை என்பது கவலைக்குரியதாக இருக்கிறது.

எனவே ஆவினுக்கான பால் கொள்முதல் அதிகரிப்பதற்கான சூழல் கனிந்து வரும் இத்தருணத்தில் அதனை தக்கவைத்துக் கொண்டு கொள்முதல் மற்றும் உற்பத்தி, விற்பனையை உயர்த்த வெறும் வாயில் முழம் போடாமல் பால் கையாளும் திறனை தான் கூறியபடி 70 லட்சம் லிட்டராக அதிகரிக்க தேவையான கட்டமைப்புகளை உருவாக்க பம்பரமாக சுழன்று போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

மேலும் மக்களின் வரிப்பணத்தில் சம்பளத்துடன் அரசு தரும் அனைத்து சலுகைகளையும் அனுபவித்து கொண்டு அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் தொடர்பான பால்வளத்துறை அமைச்சராக இருந்து வரும் மனோ தங்கராஜ் அவர்கள் அத்துறை சார்ந்த செயல்பாடுகளில் அக்கறை இல்லாமலும், அதற்கான முனைப்புடன் தீவிரமாக செயல்படாமலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் போன்று மத்தியில் ஆளுகின்ற பாஜக மற்றும் பிரதமர் மோடி எதிர்ப்பு மனநிலையிலேயே நித்தமும் இருந்து வருவது ஏற்புடையதல்ல. 

எனவே, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் இனிமேலாவது தான் சார்ந்த பால்வளத்துறைக்கும், ஆவினுக்கும் 100% உண்மையாக, ஆக்கபூர்வமாக செயல்படுமாறு வலியுறுத்துவதோடு, அவ்வாறு செயல்பட முடியவில்லை என்றால் மனோ தங்கராஜ் அவர்கள் மக்களின் வரப்பணத்தை வீணடிக்காமல் தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு முழுநேரமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்பாளராக செயல்பட்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Aavin Mano Thangaraj
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment