Advertisment

ரேஷன் கடைகளில் ஆவின்; 35 ஆண்டுகளுக்கு முன்பே தோல்வி அடைந்த திட்டம்: பால் முகவர்கள் சங்கம் எதிர்ப்பு

"35 ஆண்டுகளுக்கு பின்னோக்கி கொண்டு சென்று ஆவினை அழித்து விட வேண்டாம்" என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
cuddalore aavin dealership Tamil News

ஏற்கனவே ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்களையே மாதத்தில் ஒருமுறை பொதுமக்களுக்கு சரிவர விநியோகம் செய்ய முடியாமல் அரசு நிர்வாகம் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

Advertisment

ஆவின் அனைத்து மாவட்ட பொதுமேலாளர்கள், துணைப் பதிவாளர்கள் (பால்வளம்) உடனான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் வழக்கம் போல் நேற்றைய (28.08.2024, புதன்கிழமை) தினம் சென்னை, நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் நடைபெற்று முடிந்த நிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் "ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்படும்" என கூறியிருப்பது "உள்ளூரில் கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்" என்கிற சொலவடையை நினைவூட்டுவதாக அமைந்துள்ளதோடு, வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்ல வேண்டிய ஆவினை சுமார் 35ஆண்டுகளுக்கு பின்னோக்கி, வீழ்ச்சியை நோக்கி கொண்டு செல்வது போலிருக்கிறது.

ஏனெனில் நியாய விலைக் கடைகள் போன்ற அமுதம், சிந்தாமணி, TUCS உள்ளிட்ட கூட்டுறவு அங்காடிகளில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 35ஆண்டுகளுக்கு முன்பே ஆவின் பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் அந்த காலகட்டத்திலேயே காலாவதியாகி விற்பனையாகாத, உடைந்து போன ஆவின் பால் பொருட்களை ஆவின் நிர்வாகம் திரும்ப பெறாததால் மேற்கண்ட கூட்டுறவு அங்காடிகளில் இருந்து வரவேண்டிய பல லட்சம் ரூபாய் நிலுவையாக நின்று போக அதனை போராடி பெற்று 1992லேயே கூட்டுறவு அங்காடிகளுக்கு ஆவின் பால் பொருட்கள் விநியோகம் செய்வது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது, 

அதன் பிறகு, ஆவின் பால் பொருட்கள் தமிழகமெங்கும் எல்லா கடைகளிலும் கிடைக்கும் வகையில் மொத்த விற்பனையாளர்கள், பால் முகவர்கள் மூலம் விநியோகம் செய்யத் தொடங்கிய பிறகு ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின்  விற்பனையும் அதிகரிக்கத் தொடங்கியது என்பது கடந்த கால வரலாறு சொல்லும் உண்மையாகும். ஆனால் தற்போது தனியாரிடம் ஆவினால் போட்டி போட முடியாமல் ஆவின் விற்பனை பிரிவு அதிகாரிகள் ஏ.சி அறையில் அமர்ந்து கொண்டு அரசு சார்ந்த ரேஷன் கடைகள், பண்டகசாலைகளில் விற்க முயலுவது வேடிக்கையாக மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆவின் நிர்வாகத்தின் முயலாமை, இயலாமையை வெளிப்படுத்துவதாக இருப்பதோடு ஆவின் பால் பண்ணைகளுடைய உற்பத்தி திறன் வீணாகும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

மேலும் ஆவினில் மூலிகை பால், சுக்குமல்லி காப்பி, அஸ்வகந்தா பால் ஆகியவற்றை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக வெளியான அறிவிப்பு வரவேற்பிற்குரியது தான் என்றாலும் கூட இந்த அறிவிப்பு அமுல் நிறுவனத்தை பார்த்து காப்பியடித்துள்ளதோடு, மோடி அரசை எதிர்த்துக் கொண்டே அவர்களை மறைமுகமாக பின்பற்றும் மோடி மஸ்தான் வித்தை என்றால் அது மிகையாகாது. 

ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான பால் முகவர்கள், பல்லாயிரக்கணக்கான ஆவின் பாலகங்கள் ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை பொதுமக்களுக்கு விநியோகம், விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் அவற்றுக்கான பால், நெய், வெண்ணெய், பனீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பால் சார்ந்த உபபொருட்களையே 100% உற்பத்தி செய்து, தட்டுப்பாடின்றி, தங்குதடையின்றி விநியோகம் செய்ய முடியாமல் தள்ளாடி வருவதால் தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் மற்றும் பால் பொருட்களுக்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவி வருவதோடு, அவற்றின் விற்பனைக்கான நியாயமான கமிஷன் தொகையை பால் முகவர்களுக்கு வழங்க மனமில்லாமல் முறுக்கு, மிக்சர், கேக், நூடுல்ஸ், குக்கிஸ், கூல்காபி, ஹெல்த் மிக்ஸ், பாயாசம் மிக்ஸ் என பாலோடு தொடர்பில் இல்லாத பொருட்களை தனியார் உற்பத்தி செய்து தர, அதில் ஆவின் பெயரை போட்டு வாங்கிக் கொண்டு அதற்கு சொந்தம் கொண்டாடி தங்களின் கல்லாவை, கஜானாவை நிரப்பும் செயலில் ஆவின் அதிகாரிகள் ஈடுபட்டு வரும் நிலையில் அதில் அமைச்சர்களாக வருபவர்களுக்கும் தவறாமல் பங்கு செல்வதால் அவர்கள் அதனை ஊக்குவித்து வருகின்றனர்.

மேலும் ஆவினில் நூடூல்ஸ், பாயாசம் மிக்ஸ், ஹெல்த் மிக்ஸ் போன்றவை அறிமுகப்படுத்திய பிறகு அவை பொதுமக்களிடையே போதுமான அளவில் விற்பனை ஆகவில்லை என்பதால் நிறுத்தப்பட்டதோடு அப்போது அறிமுகப்படுத்தப்பட்ட Whole Milk Powder தற்போது எங்கு தேடியும் காண(கிடைக்க)வில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் மட்டுமின்றி மற்ற மாநிலங்களைச் சேர்ந்த அமுல், நந்தினி உள்ளிட்ட கூட்டுறவு பால் நிறுவனங்களும் புதுப்புது வகையான ஜஸ்கீரிம்களை அறிமுகப்படுத்தி வணிகச் சந்தையில் மக்களை கவர்ந்து வரும் நிலையில் கடந்த கோடை காலத்தில் கூட ஆவின் நிர்வாகம் எந்த ஒரு புதிய வகை ஐஸ்கிரீமையும் அறிமுகப்படுத்தவில்லை என்பதும், தமிழ்நாடு முழுவதும் மக்களால் பெரிதும் விரும்பி வாங்கப்பட்ட பலாப்பழ ஐஸ்கிரீம் கூட தற்போது வரை ஆவினில் கிடைக்காததும், குறிப்பிட்ட சில பால் பொருட்கள் மட்டும் ஆவினின் நேரடி பாலகங்களில் மட்டுமே கிடைக்கும் என்கிற நிலை இன்றளவும் இருப்பதும், ஆவின் பால் பொருட்கள் விற்பனை பிரிவு தனியாருக்கு இணையாக முன்னேறவில்லை அல்லது தனியாரோடு போட்டி போட தயாராக இல்லை என்பதும், இதனால் ஆவினில் பால் மற்றும் பால் பொருட்களுக்கான உற்பத்தித் திறன் பால் மற்றும் பால் பொருட்கள் பண்ணைகளில்  இருந்தும் கூட அவை சரியாக பயன்படுத்தப்படாமல் திட்டமிட்டு வீணடிக்கப்பட்டு வருகிறது என்பதும் 100% மறுக்க முடியாத உண்மையாகும்.

இந்த சூழலில் "எதைத் தின்றால் பித்தம் தெளியும்" என அலைபவர்களைப் போல, விரைவில் நிகழ இருக்கும்  தமிழ்நாடு அமைச்சரவை மாற்றத்தில் தனது அமைச்சர் பதவியும் பறி போகலாம் என்கிற அச்சத்தின் காரணமாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் தனது அமைச்சர் பதவியை தக்கவைத்துக் கொள்ள எதையாவது பேசி வைக்க வேண்டும் என்பதற்காகவே ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்களை விற்பனை செய்யப்படும் எனவும், மூலிகைப் பால் கொண்டு வரப்படும் எனவும் பேசியிருக்கிறார் என்பதை நன்றாகவே உணர முடிகிறது.

அதுமட்டுமின்றி கோடைகாலம் முடிந்து தமிழ்நாடு முழுவதும் பரவலாக பெய்துள்ள நல்ல மழை காரணமாக பசுந்தீவன உற்பத்தி அதிகமானதால் பால் உற்பத்தியும் பெருகி, ஆவினுக்கான பால் கொள்முதல் கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ள நிலையில் ஆவின் பால் கொள்முதல் 38லட்சம் லிட்டர் என்கிற இலக்கை எட்டி வரலாற்று சாதனை படைத்திருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் கூறுவது "அண்டப் புளுகு, ஆகாச புளுகு" என்பதையெல்லாம் கடந்த "கின்னஸ் சாதனை புளுகு" ஆக இருக்கிறது.

ஏனெனில் கடந்தாண்டோடு ஒப்பிடுகையில் தற்போது ஆவினுக்கான பால் கொள்முதல் சுமார் 10லட்சம் லிட்டர் அதிகரித்து ஆகஸ்ட் மாதம் சராசரி பால் கொள்முதல் சுமார் 35.29லட்சம் லிட்டர் என்கிற இலக்கை எட்டியிருந்தாலும் கூட அது அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் கூறுவது போல ஆவினின் வரலாற்றில் மிகப்பெரிய சாதனை அல்ல என்பதும், கடந்த அதிமுக ஆட்சியிலேயே 38.26லட்சம் லிட்டர் என்கிற இலக்கு எட்டப்பட்டதோடு, கொரோனா நோய் பேரிடர் காலத்தில் அந்த இலங்கையும் கடந்து சுமார் 43லட்சம் லிட்டர் என்கிற மிகப்பெரிய இலக்கை எட்டி அதிமுக ஆட்சியில் ஆவின் நிர்வாகம் வரலாற்று சாதனை படைத்திருந்ததும், அதன் பிறகு வந்த திமுக ஆட்சியில் ஆவினுக்கான பால் கொள்முதலை வரலாறு காணாத வகையில் படுவீழ்ச்சியை சந்திக்க வைத்து தினசரி பால் கொள்முதல் சுமார் 25லட்சம் லிட்டருக்கும் கீழ் சென்றது தான் திராவிட மாடல் அரசு செய்த ஆவினின் வரலாற்று சாதனை என்றால் அது மிகையாகாது என்கிற நிலையில் சராசரி பால் கொள்முதலான 35.29லட்சம் லிட்டர் என்பதை 38லட்சம் லிட்டர் என பொய்யுரைத்து வருவது அமைச்சர் பொறுப்பிற்கு அழகல்ல.

ஏற்கனவே ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்களையே மாதத்தில் ஒருமுறை பொதுமக்களுக்கு சரிவர விநியோகம் செய்ய முடியாமல் அரசு நிர்வாகம் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் தினசரி பொதுமக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை ரேஷன் கடைகளில் விற்பனை செய்யும் முயற்சியை மேற்கொண்டு ஆவினுக்கு வளர்ச்சி இல்லாமல் வீழ்ச்சியை ஏற்படுத்தி 35 ஆண்டுகளுக்கு பின்னோக்கி கொண்டு சென்று ஆவினை அழித்து விட வேண்டாம் என்றும், அமைச்சர் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக பால் கொள்முதல் குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை வரலாற்று சாதனை என பரபரப்பிற்காக ஊடகங்கள் முன் பதிவு செய்ய வேண்டாம் எனவும், ஆக்கபூர்வமான செயல்பாடுகளை முன்னெடுத்து ஆவினை வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்லுமாறும், அவ்வாறு செயல்பட்டால் அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு தர தயாராக இருக்கிறோம் என்பதையும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி தெரிவித்துக்  கொள்கிறோம். 

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Aavin Aavin Milk Tamil Nadu Govt
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment