சாத்தனூர் அணையில் நீர் திறக்கப்பட்டது குறித்து சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.10) விளக்கம் அளித்தார்.
சாத்தனூர் அணை திறப்பு குறித்து மக்களுக்கு சரியான தகவலை அரசு சொல்லவில்லை என சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி பேசினார். இதற்கு விளக்கம் அளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “அ.தி.மு.க ஆட்சியில், செம்பரம்பாக்கம் ஏரியை சொல்லாமல் திறந்து விட்ட காரணத்தினால் பெரிய வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. சுமார் 240 பேருக்கு மேல் உயிரிழந்தனர். செம்பரம்பாக்கம் ஏரியை அரசு யாருக்கும் சொல்லாமல் திறந்துவிட்டது என சி.ஏ.ஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விவகாரத்தில் உயிரிழப்புகளுக்கு காரணம் மனித தவறுகளே என அறிக்கையில் உள்ளது. அனுமதி வாங்க முடியாத காரணத்தால் வேறு வழியில்லாமல் திறந்துவிட்டார்கள். செம்பரம்பாக்கம் ஏரி திறப்பால் ஏற்பட்ட பாதிப்பை விட, தற்போது பாதிப்பு குறைவு தான். சாத்தனூர் அணையை பொறுத்தவரை 5 முறை எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின் படிப்படியாக திறந்துவிடப்பட்டது.
அதிமுக ஆட்சியை போல் எச்சரிக்கை கொடுக்காமல் தண்ணீர் திறக்கவில்லை. உரிய எச்சரிக்கை கொடுத்து சாத்தனூர் அணை திறக்கப்பட்டதால் தான் பெருமளவு சேதம் தவிர்க்கப்பட்டது என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“