நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன், சிறையில் இருந்தபோது, அவருடைய மனைவி சுப. வீரபாண்டியனிடம் ஈழத்தமிழர் வழியாக, தி.மு.க-விடம் சொல்லி அவரை விடுதலை செய்ய சொல்லுங்கள் என்று கூறியதற்கு சுப. வீரபாண்டியன் சாகட்டும் என்று கூறியதாக சாட்டை துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளதால் சர்ச்சை வெடித்துள்ளது.
தி.மு.க அரசை தீவிரமாக விமர்சித்தவர் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த யூடியூபர் சாட்டை துரைமுருகன். இந்த ஆண்டு தொடக்கத்தில், ஃபாக்ஸ்கார்ன் தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவு நஞ்சானதால், தொழிலாளர்கள் பலர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது, சாட்டை துரைமுருகன் 8 பேர் உயிரிழந்ததாக யூடியூபில் செய்தி வெளியிட்டதாகவும் வதந்தி பரப்பியதாகவும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டமும் பாய்ந்தது.
தற்போது வெளியே உள்ள சாட்டை துரைமுருகன், யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: “உண்மையிலேயே, ஸ்டாலினோ, உதயநிதி ஸ்டாலினோ என்னை பழிவாங்கவில்லை. நான் பேசியது அவர்களுக்கு தெரியுமா என்பது கூட தெரியாது. பழிவாங்கியது யார் என்றால், எங்கள் கட்சியில் இருந்து போன ராஜீவ் காந்தி, சுப. வீரபாண்டியன் இது போன்ற ஆட்கள்தான், காணொலிகளை எடுத்து அனுப்பி வழக்குபோட வைத்து திட்டமிட்டு என்னை முடக்கி இருக்கிறார்கள்.
அந்த நேரத்தில், என்னுடைய மனைவி ஒரு ஈழத் தமிழரிடம் சொல்லி அவரை விடுதலை செய்யச் சொல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு, அவர் சாகட்டும், அதற்குத்தானே ஜெயிலில் போட்டிருக்கிறோம் என்று கூறியதாக சாட்டை துரைமுருகன் சுப. வீரபாண்டியன் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
ஒரு வருஷம் என்னை சிறையில் வைக்க வேண்டும் என்பது அவர்களுடைய நோக்கம். ஒரு வருஷ உள்ளே வைத்துவிட்டால் வெளியே வந்து என்னால் நடமாட முடியாது. நோய்வாய்ப்பட்டு விடுவேன். பொருளாதாரம் முடங்கிவிடும். குடும்பம் என்னை விடாது. என்னை பேசவே கூடாது என்று நினைக்கிறார்கள். எவ்வளவு பெரிய கொடுமை என்று சாட்டை துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள சுப. வீரபாண்டியன் கூறியதாவது: “அடுத்தவர் சாவைக் கொண்டாடுகிற தீபாவளியைக்கூட நாம் கொண்டாடுவதில்லை. அப்படி பேசுவது, என்னுடைய இயல்பு இல்லை. இதை என்னுடன் சில நாட்கள் பழகியவர்கள்கூட அறிவார்கள். யார் ஒருவரையும் சாகட்டும் என்று நான் சொல்லுவதில்லை. எனவே, யார் ஒருவரையும் சாகட்டும் என்று நான் கருதியதே இல்லை. காரணம், அரசியலைத் தனிமனிதப் பகையாகப் பார்க்கிற பழக்கம் என்னிடத்திலே இல்லை. அப்படியென்றால், நீங்கள் என்ன சொன்னீர்கள் என்று கேட்கிறீர்களா? அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பதுதான் உண்மை. அவருடைய மனைவியோ, அல்லது ஈழத்தமிழர் மூலமாகவோ யாரும் என்னை அணுகவில்லை. அப்படி ஒரு சம்பவம் நடக்கவும் இல்லை.
எதுவும் நடக்காதபோது, அப்படி ஒரு கற்பனைச் சித்திரத்தை இவர்களாக உருவாக்கி, நான் இப்படி விடை சொன்னதாக அவர்கள் சொல்கிறார்கள். கொஞ்சமாக நாணயமானவர்களாக இருந்தால், அந்த ஈழட் தமிழர் மூலம் அவர் என்றைக்கு என்னிடம் பேசினார். எந்தத் தொலைபேசி எண்ணில் இருந்து பேசினார் என்று அவர்கள் சொல்லட்டும். அந்த நாணயம் எல்லாம் அவர்களுக்கு இல்லை.” என்று சாட்டை துரைமுருகனின் குற்றச்சாட்டுக்கு சுப. வீரபாண்டியன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“