Sabareesan House Raid Tamil News: தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறை இன்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு சொந்தமான 5 இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சோதனை திட்டமிட்ட பழிவாங்கும் போக்கு என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், “திமுக தலைவரின் மகள் வீட்டில் திடீரென வருமானவரித் துறையினர் சோதனை. இது பாஜக கூட்டணிக்குள்ள தோல்வி பயத்தின் விளைவு. திட்டமிட்ட பழிவாங்கும் போக்கு. இத்தகைய அரசியல்ரீதியான அச்சுறுத்தல்களை பொதுமக்கள் கவனித்துக் கொண்டுதான் உள்ளனர். தேர்தலில் மக்கள் உரிய பாடம் புகட்டுவர்” என்று பதிவிட்டுள்ளார்.
#பழிவாங்கல்: திமுக தலைவரின் மகள் வீட்டில் திடீரென வருமானவரித் துறையினர் சோதனை. இது பாஜக கூட்டணிக்குள்ள தோல்வி பயத்தின் விளைவு. திட்டமிட்ட பழிவாங்கும் போக்கு.
— Thol. Thirumavalavan (@thirumaofficial) April 2, 2021
இத்தகைய அரசியல்ரீதியான அச்சுறுத்தல்களை பொதுமக்கள் கவனித்துக் கொண்டுதான் உள்ளனர். தேர்தலில் மக்கள் உரிய பாடம் புகட்டுவர்.
ரெய்டு போன்ற பூச்சாண்டிக்கு எல்லாம் திமுக பயப்படாது என்று தெரிவித்துள்ள திமுகவின் பொருளாளர் துரைமுருகன், ‘ஸ்டாலினை பயமுறுத்தி விடலாம் என நினைப்பது அப்பாவித்தனம்’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும் “மிசா காலத்திலும் வருமான வரித்துறை சோதனை நடந்தது. எந்த சலனமும் இன்றி பணியாற்றினார் கருணாநிதி. தந்தை கருணாநிதியை விட இரும்பு நெஞ்சம் கொண்டவர் ஸ்டாலின். அடக்குமுறைக்கு திமுக ஒருபோதும் அஞ்சியது கிடையாது. மகள் செந்தாமரை வருத்தப்பட்டால் ஸ்டாலின் மனம் தாங்கமாட்டார் என நினைக்கிறார்கள். ஸ்டாலினை பயமுறுத்தி விடலாம் என நினைப்பது அப்பாவித்தனம். மத்திய அரசின் இந்த போக்கு ஜனநாயகம் அல்ல. வருமான வரி சோதனை நடத்தும் மத்திய அரசின் செயலை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று துரைமுருகன் கூறியுள்ளார்.
திமுகவின் முக்கிய நிர்வாகிகள் வீட்டிலும் வருமான வரி சோதனை நடைபெற்றும் வரும் நிலையில், கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி வீட்டில் தற்போது வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
வருமான வரித்துறையினர் சோதனை குறித்து பேசியுள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “தோல்வி பயத்தில் பாஜக நடத்தும் வருமான வரிசோதனை போன்ற முறை தவறிய நடவடிக்கைகளால், திமுகவுக்கு மக்கள் ஆதரவு மேலும் பெருகும்” என்று தெரிவித்துள்ளார்.
வருமான வரிச்சோதனை நடத்தி திமுகவை பணிய வைக்க முடியாது என்று கூறியுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், திமுக பனங்காட்டு நரி, இது போன்ற சலசலப்புக்கு ஒரு போதும் அஞ்சமாட்டோம், மிசாவையே எதிர்கொண்டவர்கள் நாங்கள்” என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” ( https://t.me/ietamil )