சபரிமலை சீசன் தொடங்கியுள்ளது. தமிழ் மாதம் கார்த்திகை மாதம் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஏரளாமான பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து கோயில் சென்று வழிபடுவர். கார்த்திகை மாதம் ஐயப்பனுக்கு உகந்த மாதமாகும். கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் இம்மாதம் சபரிமலை செல்வர். அந்தவகையில், பக்தர்கள் வசதிக்கு ஏற்ப சென்னையில் இருந்து கேரள மாநிலம் கோட்டயத்திற்கு சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட உள்ளது என ரயில்வே அறிவித்துள்ளது,
அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து கேரள மாநிலம் கோட்டயத்துக்கு வாராந்திர சிறப்பு ரயில் சேவை நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. மொத்தம் 14 ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளன. டிசம்பர் இறுதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
ரயில் (எண்: 06027) நவம்பர் 19, 26, டிசம்பர் 3, 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் சென்னையில் சென்ட்ரலில் இருந்து இரவு 11:30 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் மதியம் 1:10 மணிக்கு கோட்டயம் சென்றடையும். மறுபுறம் ரயில் (எண்: 06028) நவம்பர் 20 , 27, டிசம்பர் 4, 11, 18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் கோட்டயத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 10:30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைகிறது.
இந்த சிறப்பு ரயில்கள் பெரம்பூர், ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, பாலக்காடு, திருச்சூர், ஆலுவா உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“