சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற கேரள அரசின் உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது. மேலும், நெறிமுறை வழிகாட்டு புத்தகத்தில் அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என தவறாக அச்சடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை புதன்கிழமை மாலை திறக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுப்பதற்கான கட்டுப்பாடுகள் இல்லாததால் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தா்களின் வருகை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சபரிமலைக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை கேரள அரசு சார்பில் செய்யப்பட்டுள்ளது. சபரிமலைக்கு பக்தர்கள் சென்று வர தமிழக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரன் தெரிவித்தார்.
இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்கப்படுவதால், 1,500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய ஒரு புத்தகம் வழங்கப்பட்டது. அந்த புத்தகத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, அனைத்து வயது பெண்களையும் சபரிமலைக்கு அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழிகாட்டு நெறிமுறைகள் புத்தகத்தில் அனைத்து பெண்களையும் சபரிமலைக்கு அனுமதிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல் தவறுதலாக அச்சடிக்கப்பட்டதாகக் கூறி இதனை கேரள அரசு வாபஸ் பெற்றுள்ளது.
இது குறித்து கேரள தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், சபரிமலையில் அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறை புத்தகத்தில் தவறாக அச்சடிக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், சபரிமலையில் 10 வயதுக்கு கீழே உள்ள பெண்கள் மற்றும் 50 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று விளக்கமளித்தார்.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 2018ல் உத்தரவிட்டது. ஆனால், சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் நடைமுறைப்படுத்துவதில் தடை ஏற்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.