இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனக்கு ஆலோசனை வழங்கிய சென்னை ஹோட்டல் உழியரைத் தேடிய நிலையில், அந்த ஹோட்டல் ஊழியரை ஊடகங்கள் சென்னையில் கண்டுபிடித்து நேர்காணல் செய்தன.
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சனிக்கிழமை தனது டுவிட்டர் பக்கத்தில், 2001 ஆம் ஆண்டில் தான் சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் தங்கியிருந்தபோது ஹோட்டல் ஊழியர் ஒருவர் தனது கிரிக்கெட் கைப் பட்டையை மாற்ற ஆலோசனை வழங்கியதாகவும் அதை ஏற்றுக்கொண்டு மாற்றிக்கொண்டதாவும் கூறினார். இந்த ஆலோசனையை வழங்கிய சென்னையைச் சேர்ந்த அந்த ஹோட்டல் ஊழியரை தான் சந்திக்க விரும்புவதால் அவரைக் கண்டுபிடிக்க நெட்டிசன்கள் உதவ வேண்டும் என்று கூறியிருந்தார். இதையடுத்து அந்த செய்தி நேற்று இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரல் ஆனது.
19 ஆண்டுகளுக்கு முன்பு சச்சின் டெண்டுல்கருக்கு ஆலோசனை வழங்கிய தாஜ் கோரமண்டல் ஹோட்டல் ஊழியரை சென்னை பெரம்பூரில் கண்டுபிடித்து ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை அவரிடம் பேட்டி எடுத்து ஒளிபரப்பு செய்தன.
சென்னை பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத் என்பவர்தான் 19 ஆண்டுகளுக்கு முன்பு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு அவருடைய கைப்பட்டை ரன்குவிப்புக்கு தடையாக இருக்கிறது அதை மாற்ற வேண்டும் என்று ஆலோசனை வழங்கியதாகவும் இத்தனை ஆண்டுகள் கழித்து அதை நினைவில் வைத்திருந்து தன்னை சந்திக்க வேண்டும் என கூறியுள்ள சச்சின் டெண்டுல்கருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கருக்கு தான் ஆலோசனை வழங்கியது குறித்து குருபிரசாத் ஊடகங்களிடம் கூறுகையில், “சச்சின் டெண்டுல்கர் என்னை பார்க்க நினைப்பது சந்தோஷமான அதிர்ச்சியாக இருக்கிறது. ரசிகர்கள் எல்லோரும் அவரைத்தான் பார்க்க விரும்புவார்கள். ஆனால், அவர் ஒரு ரசிகரைப் பார்க்க நினைப்பது சந்தோஷமான அதிர்ச்சியாக உள்ளது. தனக்கு ஆலோசனை வழங்கிய ஹோட்டல் ஊழியரைத் தேடுவதாக சச்சின் டெண்டுல்கர் டுவிட் செய்தது எனக்கு தாமதமாக நேற்று மாலைதான் எனது அக்கா மகன் மூலமாகத் தெரிந்தது. இந்த விஷயத்தை அப்போது என்னுடைய நண்பர்களுடனும் முக்கியமானவர்களுடனும் மட்டும்தான் பகிருந்துகொண்டேன்.
2001 இல் இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் நடந்தது. அதற்குப் பிறகு, சென்னையில் சச்சின் டெண்டுல்கரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பல வீரர்களை சந்தித்திருக்கிறேன். ஆனால், டெண்டுல்கரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. அப்போது சச்சின் டெண்டுல்கர் உள்ளே இருந்து வெளியே வந்தார். அவரிடம் ஆட்டோ கிராஃப் வாங்கிக்கொண்டு, சார் நான் ஒரு ஆலோசனை சொல்லலாமா என்று கேட்டேன். அப்போது அவர் சொல்லுங்கள் என்றார். அதற்கு நான், சார் நீங்கள் விளையாடும்போது, கையில் ஒரு முழங்கைப் பட்டை அணிந்திருக்கிறீர்கள். அது நீங்கள் விளையாடும்போது உங்களுடைய பேட் வேகமாக வீசுவதை தடுக்கிறது. அது மணிக்கட்டை தடுக்கிறது. உங்களுடைய விளையாடும் ஸ்டைலுக்கு அது தடையாக உள்ளது.
பந்துகளை சரியாக கணிக்க முடியாமல் அப்போது நிறைய அவுட் ஆகிக்கொண்டிருந்தார்.
உங்களுடைய இயல்பான ஆட்டத்துக்கு அது தடையாக இருக்கிறது. அதை நீங்கள் மாற்ற வேண்டும் என்று கூறினேன்.
இதைக் கேட்ட அவர் நீங்கள் இவ்வளவு கூர்மையாக பார்க்கிறீர்களா? என்று கேட்டார். அதற்கு நான் ஆமாம்... சார் நான் உங்களுடைய பெரிய ரசிகன் என்று கூறினேன். அவரும் இதை நான் கவனத்தில் எடுத்துக்கொள்கிறேன் என்று கூறினார்.
இது ஒரு சின்ன விஷம். இதை 19 வருடங்களுக்குப் பிறகு நினைவில் வைத்திருந்து என்னைப் பார்க்க நினைத்திருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அப்போது இந்த விஷயத்தை நான் எனது நண்பர்களிடம் கூறினேன். அவர்கள் எல்லோரும் இதை நினைவுகூர்ந்து எனக்கு போன் செய்து பேசினார்கள். அவர்கள் எனக்கு சச்சின் டெண்டுல்கருக்கு பதில் டுவிட் செய்யக் கூறினார்கள். நானும் பதில் டுவிட் செய்துள்ளேன்.
என்னுடைய ஆலோசனைக்குப் பிறகு அவர் அந்த கைப்பட்டையில் மாற்றம் செய்தார். தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடினார்.
அவரை சந்திப்பது எப்போது என்று அவர்தான் சொல்ல வேண்டும். அவரே கூட என்னைப் பார்க்க வரலாம். ஏனென்றால், ஒரு ரசிகரைப் பார்க்க இவ்வளவு முயற்சி செய்பவர் சென்னைக்கும் வரலாம்.
சச்சின் டெண்டுல்கர் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என வேண்டுகிறேன்.” என்று குருபிரசாத் கூறினார்.