முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் என்று கூறப்படும் சாதிக் பாட்சாவின் மனைவியான ரெஹ்னா பானு கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அவர் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தை நாடியுள்ளார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அப்போதைய மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர், 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கனிமொழி, ராசா உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
முன்னதாக, இந்த வழக்கில் ஆ.ராசாவின் நண்பர் என கூறப்படும், கிரீன் ஹவுஸ் ப்ரோமோட்டர்ஸ் நிர்வாகி சாதிக் பாட்சாவிடம் விசாரணை நடத்த சிபிஐ நடவடிக்கை மேற்கொள்ள இருந்தது.
இந்த சூழலில், கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16-ம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனது வீட்டில் சாதிக் பாட்சா பிணமாகக் கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
அவரது மரணத்தை தொடர்ந்து, அவர் தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொள்ள தூண்டப்பட்டாரா என பல கேள்விகள் எழுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து எழுந்த பல ஊகங்களுக்கிடையில், விசாரணை நடத்திய சிபிஐ, அவரது மரணம் ஒரு தற்கொலை என கூறியது.
இந்த நிலையில் சாதிக் பாட்ஷாவின் எட்டாம் ஆண்டு நினைவு தினம் அண்மையில் அனுசரிக்கப்பட்டது.
இதற்காக பத்திரிகைகளில் சாதிக் பாட்ஷா மனைவி மற்றும் குடுமபத்தினர் சார்பில் நினைவஞ்சலி விளம்பரங்கள் கொடுக்கப்பட்டிருந்தன, சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அந்த சுவரொட்டிகளில் கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கு நீ உவமை ஆனாயே. எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த போஸ்டர் சமூகவலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து,பல்வேறு கேள்விகளையும் எழுப்பியது.
இந்நிலையில், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், பாதுகாப்பு வழங்கவும் கோரி பாட்சாவின் மனைவி ரெஹ்னா பானு, இன்று சென்னை காவல் ஆணையரகம் அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். நேற்று இரவு தனது கார் மீது துரைப்பாக்கத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரெஹனா புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த ரெஹனா, கணவரின் நினைவு தின விளம்பரத்துக்குப்பிறகு இந்தச் சம்பவம் நடந்துள்ளது எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளவே இந்த புகார் மனுவை அளித்துள்ளதாக தெரிவித்தார்.