Safer Ladies Hostels Chennai : சென்னை ஆதம்பாக்கத்தில் மூன்று வாரங்களுக்கு முன்பு, பெண்கள் விடுதி ஒன்றில் இருந்து ரகசிய கேமராக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்பு, அந்த விடுதியின் உரிமையாளர் சம்பத் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.
வெளியூர்களில் இருந்து, சென்னை வந்து தங்கும் பெண்களின் பாதுகாப்பினையும், குழந்தைகள் விடுதிகளின் பாதுகாப்பினையும் உறுதி செய்யும் வகையில், அனைத்து விடுதிகளும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையான அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
சென்னை ஆட்சியர் சண்முக சுந்தரம், அதன் பின்பு ஒரு உத்தரவு ஒன்றினையும் அதில் 15 முக்கியமான கட்டளைகளையும் அறிவித்திருக்கிறார். குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி, முறையான அனுமதியைப் பெற கால அவகாசமும் கொடுக்கப்பட்டிருந்தது.
முறையான உரிமம் பெறாமல் பெண்கள் மற்றும் சிறார்களுக்கான விடுதிகளை நடத்தும் உரிமையாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
234 விடுதிகள், 15 உத்தரவுகளையும் முறையாக பின்பற்றுகின்றோம். எங்களுக்கு விடுதிகள் நடத்த முறையான உரிமத்தினை அளித்திட வேண்டும் என்று கூறி விண்ணப்பங்களை பதிவு செய்திருக்கிறார்கள்.
டிசம்பர் 31ம் தேதிக்குள் நிச்சயமாக அனைத்து விடுதிகளும் அந்த விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும். இல்லையென்றால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என திட்டவட்டமாக கூறிவிட்டார் சென்னை ஆட்சியர்.
மேலும் படிக்க : வெளியூர்களில் இருந்து சென்னை வரும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தருகிறதா தங்கும் விடுதிகள்
Safer Ladies Hostels Chennai : அறிக்கையில் இடம் பெற்றிருந்த முக்கியமான அறிவிப்புகள்
அனைத்து விடுதிகளிலும் கண்காணிப்பு கேமராவும், டி.வி.ஆர்ரூம் இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும்.
ஒவ்வொரு 50 பெண்களுக்கும் ஒரு விடுதி காப்பாளரை நியமிக்க வேண்டும்.
முழு நேரமும் விடுதி பாதுகாப்பில் இருக்க வேண்டும்.
விடுமுறை நாட்களில், பெண்ணின் உறவினர்கள் வந்த பின்பே பெண்களை வெளியே அனுப்ப வேண்டும்.
தீயணைப்புத் துறை, சுகாதாரத்துறை, காவல்த்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலகங்களில் முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும் போன்ற 15 கட்டளைகள் அடங்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.