/indian-express-tamil/media/media_files/2025/10/22/safety-alert-in-coimbatore-2025-10-22-12-15-25.jpg)
கோவையில் அடுத்தடுத்து விபத்துகள்: பள்ளி வேன் மோதியதில் மாணவர் படுகாயம்; மின்கம்பம் சாய்ந்ததால் பரபரப்பு
கோவையில், போதிய பராமரிப்பின்மை காரணமாக அடுத்தடுத்து விபத்துகள் ஏற்பட்டுள்ளன. நீலம்பூரில் இயங்கும் தனியார் பள்ளி வாகனம் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு மாணவர் காயமடைந்தார். மேலும், காந்திபுரம் அருகே கார் மோதியதில் உயர் மின் அழுத்த மின்கம்பம் சாய்ந்தது.
மாணவர் படுகாயம்கோவை நீலம்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் சைதன்யா பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். தீபாவளி விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், சைதன்யா குழுமத்திற்குச் சொந்தமான கல்லூரி வேன் பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. கருமத்தம்பட்டி அடுத்த எலச்சிபாளையம் பகுதியில் இருந்து வந்த வேன், கருமத்தம்பட்டி அருகே சர்வீஸ் சாலைக்குத் திரும்பும் போது ஓட்டுநர் மகேஸ்வரனின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரத்தில் இருந்த தடுப்பு மீது மோதி நின்றது. இதில் பள்ளி மாணவர் ஒருவர் காயமடைந்தார். மற்ற 5 மாணவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். காயமடைந்த சிறுவன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குழந்தைகளை மீட்டு மற்றொரு வாகனத்தில் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்துக்குள்ளான வாகனம் முறையாகப் பராமரிக்கப்படாததும், வேனின் டயர் மிக மோசமாக இருந்ததும் விபத்துக்குக் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், மழைக்காலம் என்பதால் பள்ளி, கல்லூரி வாகனங்கள் மறுபரிசோதனை செய்யப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர். ஆண்டுதோறும் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டாலும், முறையான பராமரிப்பு இல்லாத சில வாகனங்களுக்கும் பல்வேறு காரணங்களால் அனுமதி வழங்கப்படுவதாகவும், மாவட்ட நிர்வாகம் இதனைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை வி.கே.கே. மேனன் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மோதியதில் உயர் மின் அழுத்த மின்கம்பம் சாய்ந்த மற்றொரு விபத்தும் நடந்துள்ளது. காந்திபுரம் அருகே வி.கே.கே. மேனன் சாலையின் நடுவே உள்ள தடுப்புகளை ஒட்டி இரும்பு மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரவு 2 மணியளவில் அவ்வழியே வந்த ஒரு டாக்சி கார், அந்த மின்கம்பத்தில் மோதியது. இதன் காரணமாக, அடிப்பகுதியில் துருப்பிடித்த நிலையில் இருந்த மின்கம்பம் அடியோடு சாய்ந்தது.
மின்கம்பம் சாய்ந்ததால் அப்பகுதியில் உடனடியாக மின்தடை ஏற்பட்டது. நல்லவேளையாக, வேறு அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படவில்லை. தகவல் அறிந்து விரைந்த மின்வாரிய ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் போக்குவரத்தைச் சீரமைத்தனர். பருவமழை தொடங்கிவிட்டதால், சேதமடைந்த நிலையில் இருக்கும் மின்கம்பங்களைப் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.