அக்டோபர் 17-ஆம் தேதிவரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், கனமழையை எதிர்கொள்ளும் விதமாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
அதன்பேரில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும் நாளை (அக்டோபர் 15) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், தகவல் தொழில்நுட்பதுறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே பணியாற்ற அறிவுறுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளாது.
இதுமட்டுமின்றி வெள்ளத்தால் பாதிக்கக் கூடிய பகுதிகளை கண்டறிந்து, அந்த இடங்களில் மீட்பு படகுகளை உடனடியாக நிறுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், குறிப்பிட்ட இடங்களில் இருக்ககூடிய பொதுமக்களை முன்கூட்டியே நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
நிவாரண முகாம்களில் ரொட்டி, குடிநீர் பாட்டில்களை உடனடியாக இருப்பு வைக்க வேண்டுமெனவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக, எந்த விதமான தடையுமின்றி ஆவின் பால் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோல், முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் உணவு பொருள்களை இருப்பு வைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மின் உற்பத்தி மற்றும் மின் விநியோகம் ஆகியவை சீராக இருப்பதை உறுதி செய்யக் கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கூடுதலாக, பருவமழை பாதிப்புகளை கண்டறிய மக்களுக்கு உதவ மாவட்ட கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால், ஆங்காங்கே உள்ள குழிகளை. மூடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மிக கனமழையால் பொதுமக்களின் வசதிக்கேற்ப அக்டோபர் 15-ஆம் தேதி முதல் அக்டோபர் 17-ஆம் தேதி வரை கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“