சென்னை, கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் திருவள்ளுவர் காவி உடை அணிந்திருப்பதை போன்று படங்கள் இடம்பெற்றுள்ள விவகாரத்திற்கு, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த ஆண்டில் மட்டும் ஆளுநருக்கு எதிராக மூன்றாவது முறையாக இது போன்ற சர்ச்சை கிளம்பியுள்ளது.
முன்னதாக, கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதற்கு வெள்ளி விழா கொண்டாட்டம் வரும் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1-ஆகிய தேதிகளில் நடத்த தமிழக அரசு ஆயத்தமாகி வருகிறது. ஏற்கனவே, மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே பல்வேறு கருத்து மோதல்கள் நிலவி வரும் வேளையில், திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை அணிவிக்கப்பட்ட விவகாரம் பேசுபொருளாகியுள்ளது. இதனால், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகள், ஆளுநருக்கு எதிராக தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்,
ஆளுநர் மாளிகையில் நேற்றைய தினம் திருவள்ளுவர், கபிர் மற்றும் யோகி வெமனன் குறித்த கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இதற்காக அச்சிடப்பட்டிருந்த அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மாநில அரசுகள் பயன்படுத்தும் புகைப்படங்களில் திருவள்ளுவர் வெள்ளை உடை அணிந்திருப்பது போன்று இருக்கும்.
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற திருவள்ளுவர் தினத்தின் போது, காவி உடை அணிவிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு, ஆளுநர் ஆர்.என். ரவி மாலை அணிவித்தார். இதே போல், ஆளுநர் மாளிகையில் கடந்த மே மாதம் நடத்தப்பட்ட நிகழ்விலும் காவி உடை அணிவிக்கப்பட்ட திருவள்ளுவரின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர், ஆளுநர் ஆ.ர்.என். ரவிக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“