எழுத்தாளரும் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான டாக்டர் மு.ராஜேந்திரன், காளையார் கோவில் போரை அடிப்படையாகக் கொண்டு எழுதிய ‘காலா பாணி’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் டாக்டர் மு. ராஜேந்திரன் எழுத்தாளர், வரலாற்று ஆய்வாளர், ஐ.ஏ.எஸ் அதிகாரி என பன்முக ஆளுமை கொண்டவர். இவர் மதுரை மாவட்டம் திருமங்கலத்திற்கு அருகே வடகரை கிராமத்தில் பிறந்தவர். எம்.ஏ. ஆங்கில இலக்கியமும் சட்டமும் படித்தவர். குடிமைப் பணி தேர்வில் வரலாற்றை ஒரு பாடமாக எடுத்துப் படித்த போது, வரலாறு மீது ஆர்வம் கொண்டவர். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 1998-ம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றவர்.
டாக்டர் மு. ராஜேந்திரன் எழுதிய பிற நூல்கள், சோழர் காலச் செப்பேடுகள், பாண்டியர் காலச் செப்பேடுகள், சேரர் காலச் செப்பேடுகள், பல்லவர் காலச் செப்பேடுகள், சட்ட வல்லுநர் திருவள்ளுவர், வடகரை - ஒரு வம்சத்தின் வரலாறு, பாதாளி, 1801 ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
எழுத்தாளர் டாக்டர் மு. ராஜேந்திரன் எழுதிய ‘காலா பாணி நாவல், 1801-ம் ஆண்டு ஆறு மாதங்கள் நடைபெற்ற காளையார் கோவில் போரை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட வரலாற்று நாவல். இந்த சொந்த நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு முகம் தெரியாத தீவில் இறக்கிவிடப்படும் ஒரு அரசனின் கதைதான் காலா பாணி. 200 ஆண்டுகளுக்கு முன் சிவகங்கை மன்னரும், வேலு நாச்சியாரின் மருமகனுமான வேங்கை பெரிய உடையணத் தேவன் மற்றும் அவர் கூட்டாளிகள் 72 பேர் நாடு கடத்தப்பட்ட கதைதான் இந்த நாவல்.
மத்திய அரசின் சாகித்ய அகாடமி நிறுவனம் ஆண்டுதோறும் பிராந்திய மொழிகளில் சிறந்த படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி விருது அளிக்கிறது. அந்த வகையில், இந்த ஆண்டு சாகித்ய அகாடமி எழுத்தாளர், ஐ.ஏ.எஸ் அதிகாரி டாக்டர் மு. ராஜேந்திரன் எழுதிய ‘காலா பாணி’ நாவலுக்கு சாகித்ய அகாடமி அறிவித்துள்ளது.
சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ள எழுத்தாளர் டாக்டர் மு. ராஜேந்திரனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மு.க. ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தி வாழ்த்து கூறியிருப்பதாவது: “காலா பாணி: நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை’ எனும் வரலாற்றுப் புதினத்துக்காக Sahitya Akademi விருதுக்குத் தேர்வாகியிருக்கும் திரு. மு. ராஜேந்திரன் IAS (ஓய்வு) அவர்களுக்கு என் பாராட்டுகள். இந்திய விடுதலைப் போரில் தமிழகத்தின் வீரம் தோய்ந்த வரலாறு மேலும் வெளிச்சம் பெறட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
கன்னட எழுத்தாளர் நேமி சந்த்ரா எழுதிய ‘யாத் வஷேம்’ நாவலை தமிழில் மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளர் கே. நல்லதம்பிக்கு தமிழ் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ள கே. நல்லதம்பிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மு.க. ஸ்டாலின் முகநூல் பக்கத்தில், “வெறுப்புணர்வும், வன்முறையும் மக்களை எந்த அளவுக்கு வதைக்கும் என்ற வலியைக் கூறி, காந்தியடிகள் காட்டிய அமைதிப்பாதையை வலியுறுத்தும் "யாத் வஷேம்" கன்னட நூலின் தமிழ் மொழிபெயர்ப்புக்காக Sahitya Akademi விருதுபெறத் தேர்வாகியுள்ள கே. நல்லதம்பி அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்.” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.