மத்திய அரசின் சாகித்திய அகாடமி நிறுவனம், இந்தியாவில் 21 மொழிகளில் வெளியாகும் சிறந்த படைப்புகளை தேர்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு எட்டு கவிதைப் புத்தகங்கள், 3 நாவல்கள், 2 சிறுகதைகள், 3 கட்டுரைகள், 3 இலக்கிய விமர்சனங்கள், 1 நாடகம் மற்றும் 1 ஆய்வுப் புத்தகங்களுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாகித்ய அகாடமி விருது பெறுவோருக்கு ஒரு பதக்கமும், ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படுகிறது. அதன்படி, 2024-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றவர்களின் பட்டியல் புதன்கிழமை (டிசம்பர் 18) வெளியாகி உள்ளது.
தமிழில், வரலாற்றுப் பேராசிரியர், எழுத்தாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதிய திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908- என்ற நூலுக்கு 2024-ம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வரலாற்றில், 1908-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி வ.உ.சி. கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறையின் தொடர்ச்சியாக மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டது. திருநெல்வேலியில் ஏற்பட்ட இந்த எழுச்சியையும், அதன் விளைவுகளையும் ஆய்வு செய்து இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதிய ‘திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சியும் 1908’ என்ற நூலுக்கு சாகித்திய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்து வருகின்றனர்.
சுதந்திரத்திற்கு முன்பு நடந்த எழுச்சிகளில் மிகவும் முக்கியமானது 1908ல் நடந்த திருநெல்வேலி எழுச்சி. நெல்லையிலும் தூத்துக்குடியிலும் அப்போது ஏற்பட்ட மக்கள் எழுச்சியையும் அதன் தாக்கத்தையும் பல அரிதான தகவல்களுடன் எடுத்துச் சொல்லும் ஆய்வு நூல் 'திருநெல்வேலி எழுச்சியும் வ.உசி.யும்… pic.twitter.com/1cQLVaZqhN
— Su Venkatesan MP (@SuVe4Madurai) December 18, 2024
பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாதெமி விருது அறிவித்துள்ளது குறித்து எழுத்தாளரும் மதுரை எம்.பி-யுமான சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடுகையில், “சுதந்திரத்திற்கு முன்பு நடந்த எழுச்சிகளில் மிகவும் முக்கியமானது 1908-ல் நடந்த திருநெல்வேலி எழுச்சி. நெல்லையிலும் தூத்துக்குடியிலும் அப்போது ஏற்பட்ட மக்கள் எழுச்சியையும் அதன் தாக்கத்தையும் பல அரிதான தகவல்களுடன் எடுத்துச் சொல்லும் ஆய்வு நூல் 'திருநெல்வேலி எழுச்சியும் வ.உசி.யும் 1908'. இந்த ஆய்வு நூலுக்காக பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி(@ARV_Chalapathy) அவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அண்ணனை, ஆய்வாளனை, அறிஞனை கொண்டாடுவோம். வாழ்த்துகள்.” என்று தெரிவித்துள்ளார்.
‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908’ நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெறவுள்ள ஆ.இரா. வேங்கடாசலபதி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “வ.உ.சி.க்கான உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் தமிழ் மக்களிடையே இருக்கு. இந்த நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைப்பதால், இனி அந்த ஆதங்கம் குறையும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
பேராசிரியர், எழுத்தாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதியுள்ள ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908’ என்ற நூலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.