முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் உடல் இன்று சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. மாலை 6 மணிக்கு தியாகராயநகரில் உள்ள மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.
சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தனது அடுத்த படத்தின், படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்ய நண்பர் கோபிநாத்துடன் இமாச்சல பிரதேசத்திற்கு சென்றிருந்தார். இவர்கள் சென்ற கார் கட்டுபாட்டை இழந்து சட்லெஜ் ஆற்றில் விழுந்தது. நண்பர் கோபிநாத்தை உயிருக்கு ஆபத்தான் நிலையில் மீட்டனர். தொடர்ந்து உள்ளூரை சேர்ந்த கார் ஓட்டுநர் தன்ஜினின் சடலம் மீட்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்கள் தேடப்பட்டது. இந்நிலையில் நேற்று அவரது உடலை மீட்பு படை வீரர்கள் மீட்டனர். இந்நிலையில் இவரது மரணத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில் வெற்றியின் உடல் இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து இன்று சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. மாலை 5 முதல் 6 மணி வரை சிஐடி நகரில் உள்ள இல்லத்தில் மக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு தியாகராயநகரில் உள்ள மயானத்தில் வெற்றியின் உடல் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“