சேலம் விமான நிலையத்தின் முதல் விமான சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
சென்னை - சேலம் இடையேயான விமான சேவை 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. சேலம் ஓமலூர் அருகேயுள்ள கமலாபுரத்தில் அமைந்துள்ள புதிய விமான நிலையத்தில் இன்று விமான சேவை துவக்கி வைக்கப்பட்டது. இதன் சாட்சியாக சென்னையிலிருந்து சேலத்திற்கு முதல்வர் சென்ற ட்ரூஜெட் விமானம் தரையிரக்கப்பட்டது. நீண்ட ஆண்டுகளுக்குப் பின்னர் சென்றடைந்த விமானத்திற்கு தண்ணீர் பாய்ச்சி வரவேற்பு நிகழ்ந்தது.
பின்னர் அந்த விமான நிலையத்தில் துவக்க விழா நடைபெற்று, தகுந்த மரியாதைகளுடன் அதே விமானத்தில் முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் சென்னை திரும்புகின்றனர். சென்னை - சேலம் விமானத்தில் பயணம் செய்யும் கட்டண தொகை ரூ.1499 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தினமும் காலை 9.50 மணிக்கு விமானம் புறப்பட்டு காலை 10.40 மணிக்கு சேலம் சென்றடையும். சேலத்தில் இருந்து காலை 11 மணிக்குப் புறப்பட்டு 11.50 மணிக்குச் சென்னையை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவில் உரையாடிய முதல்வர் பழனிசாமி, ‘ மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் இந்தச் சேவை துவங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள விமான நிலையங்கள் சர்வதேச அளவிற்குத் தரம் உயர்த்தப்படும். மேலும் திருச்சி விமான நிலையத்தை விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அடுத்தகட்டமாக வேலூர் மற்றும் தஞ்சாவூரில் விமான சேவை தொடங்கப்படும்.’ என்று கூறினார்.
இந்தத் துவக்க விழாவில் முதல்வருடன், சபாநாயகர் தனபால், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.