சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
சேலம்-சென்னை 8 வழிச்சாலைத் திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முனைப்பாக இருக்கின்றன. ஆனால் பல்வேறு அமைப்புகள் அந்த திட்டத்திற்கு எதிராக போராடி வருகின்றன.
சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக பாமக இளைஞரணி தலைவரும் தருமபுரி எம்.பி.யுமான அன்புமணி உள்பட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சுற்றுச்சூழல் மதிப்பீடு ஆய்வு செய்யாமல் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக கூறி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த முறை விசாரணையின் போது, 8 வழிச்சாலைக்காக மரங்களை வெட்டப்படுவது எந்த சூழ்நிலையில் உள்ளது என்பது குறித்த அறிக்கையை அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும், சமூக பாதிப்பு மதிப்பீட்டு ஆய்வு அறிக்கை எந்த நிலையில் உள்ளது? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 8 வழிச்சாலைக்கு மரங்களை வெட்டக் கூடாது என்ற உத்தரவை மீறினால் மொத்த திட்டத்துக்கு தடை விதிக்க நேரிடும் எனவும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் இன்று (செப்டம்பர் 14) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, திட்டத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறி மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் தொடர்பான அறிக்கையில் முரன்பாடு இருப்பதாக தெரிவித்த நீதிபதிகள், திட்டத்துக்கு நிலம் கையப்படுத்த காலக்கெடு ஏதும் நிர்ணயிக்காமல் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தனர்.
சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிரான சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த ஒரு வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.