சேலம் - சென்னை இடையேயான 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடை செல்லும் என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
தமிழகத்தில் சேலம் - சென்னை இடையே 8 வழிச்சாலை அமைப்பதற்கு விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததாலும் மரங்களை வெட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதாலும் இந்த திட்டத்திற்கு தமிழகத்தில் பெரிய அளவில் எதிர்ப்பு எழுந்தது. அதனால், சேலம் - சென்னை 8 வழிச்சாலைத் திட்டத்துக்கு தடை கோரிய வழக்கில், கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் சேலம் - சென்னை 8 வழிச்சாலைத் திட்டத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
சேலம் - சென்னை இடையே 8 வழிச்சாலை திட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை எதிர்த்து சேலம் - சென்னை சாலை திட்ட இயக்குநர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதி கான்வில்கர் தலைமையிலான அமர்வு, சேலம் - சென்னை 8 வழிச்சாலைத் திட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை எதிர்த்து, திட்ட இயக்குநர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
அதே நேரத்தில், உச்ச நீதிமன்றம், புதிய அறிவிப்பாணையை வெளியிட்டு 8 வழிச் சாலை திட்டத்தை தொடரலாம் என்றும் புதிய சாலைகள் அமைக்க மத்திய அரசுக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கும் அதிகாரம் உள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்துள்ளது. மேலும், சேலம் - சென்னை 8 வழிச் சாலைத் திட்டத்துக்கு நிலங்களை கையகப்படுத்தி, திட்டத்தை செயல்படுத்திய பிறகு, இந்த திட்டத்தினால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சுற்றுச்சூழல் துறை குறிப்பிட்டுக் காட்டினால் அப்போது இந்த திட்டத்தை எப்படி தொடர்வீர்கள் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், புதிய திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் துறையின் முன் அனுமதி அவசியம் என்பதை உறுதி செய்துள்ளது. மேலும், எட்டு வழிச் சாலைத் திட்டத்துக்கு தனியார் நிலத்தை அரசு நிலமாக கையகப்படுத்தவும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் சேலம் - சென்னை 8 வழிச்சாலைத் திட்டத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டது. அந்த உத்தரவில், சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்காக நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பானையை 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி ரத்து செய்தது. இந்த திட்டத்துக்காக பொதுமக்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களை எட்டு வாரத்துக்குள் திருப்பிக் கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.
சென்னை உயர் நீதிமன்ற பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலை துறையின் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் இந்த வக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த திட்டத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு செலவிடப்படுகிறது. 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டால், சென்னை - சேலம், சென்னை - மதுரை இடையே செல்லும் போக்குவரத்துத் தொலைவு குறையும், இதனால் எரிபொருள் மிச்சப்படும் என்று திட்ட இயக்குநர் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால், நிலத்தின் உரிமையாளர்களான பொதுமக்களின் கருத்தும், சுற்றுச்சூழல் துறையின் அனுமதியும் மிகவும் முக்கியம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.