Advertisment

சேலம்- சென்னை 8 வழிச் சாலை: தமிழக அரசு ஒத்துழைப்பை கோரும் NHAI

National Highways Authority of India seeks cooperation of Tamil Nadu government on Salem-Chennai 8-lane road Tamil News: சேலம்- சென்னை 8 வழி சாலை திட்டத்திற்கு மக்களிடம் கருத்து கேட்கும் மதிப்பீடு ஆய்வு, மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை விரைவில் தயாரிக்க தமிழக அரசின் ஒத்துழைப்பை கோரியுள்ளது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Salem-Chennai 8-lane road Tamil News: NHAI seeks cooperation OF TN GOVT

Salem-Chennai 8-lane road Tamil News: சேலம்- சென்னை இடையேயான, 277 கி.மீ., துார சாலையை, சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், எட்டு வழி சாலையாக மாற்றும் திட்டத்தை ( 8 Lane Green Road ) மத்திய அரசு அறிவித்தது. இதற்காக, நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பாணையும் வெளியிடப்பட்டது. இந்த திட்டத்துக்கு, விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Advertisment

மேலும் பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டங்களில் ஈடுபட்டன. இந்த திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள், விவசாயிகள், பூவுலகின் நண்பர்கள், டாக்டர் அன்புமணி ராமதாஸ், வக்கீல் சூர்யபிரகாசம் உள்ளிட்டோர் சார்பில் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தன.

publive-image

வழக்கு விசாரணை

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 2019ம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. அதில், சென்னை-சேலம் இடையிலான 8 வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்வதாக அதிரடியாக தெரிவித்தது. மேலும் இந்த திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 8 வார காலத்துக்குள் திரும்ப ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.

இதனையடுத்து, இந்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. விவசாயிகள், பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் உள்ளிட்டோர் சார்பில் கேவியட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.

மேல்முறையீடு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, சென்னை - சேலம் இடையேயான 8 வழி சாலைத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசின் சுற்றுச்சுழல் அனுமதி தேவை. ஆனால், நிலங்களை கையகப்படுத்தினால்தான் சுற்றுச்சுழல் அனுமதியை கோர முடியும். 2006ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின்படி, நிலத்தை கையகப்படுத்த சூழல் முன் அனுமதி தேவையில்லை என வாதிட்டார்.

தொடர்ந்து எதிர்மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சென்னை-சேலம் பசுமைச் சாலை திட்ட சாத்தியக் கூறுகளுக்கான அறிக்கையில் குறைபாடுகள் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. இதுபோன்ற அரசின் திட்டத்தை செயல்படுத்துவதற்கு சுற்றுச்சூழல் முன் அனுமதி பெற வேண்டும். திட்டம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது சரி என வாதிட்டனர்.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், இந்த மேல்முறையீடு தொடர்பாக எழுத்துப்பூர்வமான வாதங்களை எதிர்மனுதாரர்கள் ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அவற்றுக்கான விளக்க மனுவை மத்திய அரசு ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் அக்டோபர் 2ம் தேதி வழக்கு ஒத்திவைத்தனர்.

தீர்ப்பு

இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி நீதிபதிகள் கண்வில்கர் மற்றும் பி ஆர் கவாய் இது தொடர்பாக தீர்ப்பு வழங்கினர். அந்த தீர்ப்பில் “புதிய சாலைகள் அமைக்க மத்திய அரசுக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கும் அதிகாரம் உள்ளது. எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு தடையில்லை. ஏற்கெனவே நடைபெற்ற நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான நடவடிக்கை மட்டுமே செல்லாது. இது தொடர்பாக புதிய அறிவிப்பினை வெளியிட்டு திட்டத்தை செயல்படுத்தலாம்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், "சென்னை 8 வழி கட்டணச் சாலைக்காக கையகப்படுத்திய நிலங்களை மக்களுக்கே திருப்பி தரவேண்டும். சுற்றுச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லை என்ற திருத்தம் செல்லாது; அனுமதி தேவை, மக்களிடம் கருத்து கேட்க வேண்டும். புதிய அரசாணை பிறப்பித்து மீண்டும் திட்டத்தை தொடரலாம்" என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

publive-image

கோரிக்கை

இந்நிலையில், முடங்கிக் கிடக்கும் சேலம் - சென்னை எட்டு வழி சாலை திட்டத்தை மீண்டும் தொடங்கவும், மக்களிடம் கருத்து கேட்கும் மதிப்பீடு ஆய்வை சேலம், தருமபுரி, திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் விரைவில் முடிக்கவும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை விரைவில் தயாரிக்க ஒத்துழைக்குமாறும் தமிழக மாநில அரசிற்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.

“சுற்றுச்சூழல் அனுமதி பெற, மாநில அரசின் ஒத்துழைப்பு தேவைப்படும் துறையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மத்திய
சுற்றுச்சூழல் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. சமீபத்தில் மாநில அரசு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் அது குறித்த எந்த அறிக்கைகளும் கிடைக்கவில்லை” என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தை கைவிடுவது குறித்து, மாநில அரசிடம் இருந்து இதுவரை எழுத்துப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை எனவும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

publive-image

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆனது, முன்மொழியப்பட்ட சீரமைப்பைச் சுற்றி வாழும் உள்ளூர் மக்களுக்கு நிலம் கையகப்படுத்துதலின் தாக்கத்தை வலியுறுத்தும் வகையில் ஒரு விரிவான சமூக-பொருளாதார மதிப்பீட்டைச் செய்ய வேண்டும். உள்ளூர் பல்லுயிர், வனவிலங்கு வழித்தடங்கள் மற்றும் அதன் தணிப்பு உத்தி, அடிப்படை உருவாக்கம், வனவிலங்குகளின் நடமாட்டம் மற்றும் 277.3 கிமீ நடைபாதையில் உள்ள தாழ்வாரங்களை அடையாளம் காண்பது உள்ளிட்டவற்றின் மீதான தாக்கம், தன்பாத்தின் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் பொறியியல் துறையால் முடிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம், கோயம்புத்தூர், சுற்றுச்சூழல் ஆய்வை முடித்துள்ளது.

இது தொடர்பாக ராஜ்யசபாவில் பேசியுள்ள சாலைப் போக்குவரத்துக்கான மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இந்த திட்டம் 2025ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என தெரிவித்துள்ளார். "சமூக-பொருளாதார ஆய்வை மேற்கொள்ள M/s KITCO (கேரள அரசு நிறுவனம்) என்ற நிறுவனத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நியமித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் சமர்ப்பிக்கப்படும். பிறகு பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடப்படும்'' என ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.

சமூக-பொருளாதார மதிப்பீட்டை ஆய்வு செய்ய இதுவரை எந்த மாவட்ட ஆட்சியர்களும் பதில் அளிக்கவில்லை.

இதற்கிடையில், கடந்த ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த மனுவில், இத்திட்டத்தை கைவிடுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai High Court Chennai Tamil Nadu Madras High Court Nhai Cm Mk Stalin Tamilnadu Govt Tamilnadu News Latest
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment