சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை, எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகை தர இருக்கிறார்.
சேலம்-சென்னை பசுமை வழிச்சாலையை அமைப்பதில் மத்திய-மாநில அரசுகள் வேகமாக இருக்கின்றன. ரூ10,000 கோடி ரூபாய் செலவில் அமைய இருக்கும் இந்தத் திட்டத்திற்கு குறிப்பிட்ட அளவில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப் படுகின்றன. இதன் காரணமாகவே விவசாய அமைப்புகளும், பாதிக்கப்படும் மக்களும் இந்த சாலைக்கு எதிராக போராடி வருகிறார்கள்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்கிற அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. ஆனால் மதுரையில் அரசு நிலம் தாராளமாக கிடைப்பதால், நில ஆர்ஜிதப் பிரச்னை இல்லை.
இதேபோல கன்னியாகுமரியில் வர்த்தக துறைமுகம் அமைக்கும் திட்டத்தையும் மத்திய அரசு முடுக்கி விட்டிருக்கிறது. அங்கும் மீனவர்கள் மற்றும் நில ஆர்ஜிதத்தால் பாதிக்கப்படுகிறவர்கள் அதற்கு எதிராக போராடி வருகிறார்கள்.
தமிழ்நாடு அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் திட்டங்களில் அடிக்கல் நாட்டுவிழா வருகிற நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிந்ததும் நடைபெறும் என தெரிகிறது. இந்த விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகிறார்.
தமிழ்நாடு சார்ந்த பல்வேறு திட்டங்களின் தொடக்க விழா அல்லது அடிக்கல் நாட்டுவிழா அனைத்தையும் மதுரையில் ஒரே இடத்தில் நடத்த இருக்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.
ஆகஸ்ட் கடைசியில் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிரதமர் வருகை தர இருப்பதை இன்று ஒரு பேட்டியில் பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் உறுதி செய்திருக்கிறார்.
சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடுகிறவர்கள் மீது அரசு தரப்பில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். குறிப்பாக ஐபிஎல் போராட்டம், ஏப்ரல் 13-ம் தேதி சென்னையில் மோடிக்கு கருப்புக் கொடி காட்டிய போராட்டம் ஆகியவற்றில் தீவிரமாக இயங்கிய வேல்முருகன், கவுதமன், மன்சூர் அலிகான் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சேலத்தில் போராடக் கிளம்பிய பியூஷ் மனுஷ், வளர்மதி ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இயக்குனர் பாரதிராஜா மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்ச்சப்படுகின்றன. மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன், வெளிநாடு சென்றிருப்பதாக தகவல்! அணு உலை எதிர்ப்பு இயக்கத் தலைவர் உதயகுமரன் சொந்த வேலை நிமித்தமாக பெங்களூருவில் முகாமிட்டிருக்கிறார்.
சீமான், அமீர் உள்ளிட்டவர்கள் மீதான காவல்துறை கண்காணிப்பும் அதிகப்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுத் திட்டங்களுக்கு எதிராக வலுவான குரல்கள் எழாத வண்ணன் நடவடிக்கை எடுப்பதில் அரசு மும்முரமாகவே இருக்கிறது.
குறிப்பாக ஏப்ரல் 13-ம் தேதி மோடி சென்னை வருகை தரும்போது ஏற்பட்ட நிகழ்வுகள், அடுத்த முறை அவர் தமிழகம் வரும்போது நடந்துவிடக் கூடாது என்பதே அதிகார வட்டாரங்களின் எண்ணம்! அடுத்தடுத்து அரங்கேறும் காட்சிகள் அதை உணர்த்துகின்றன.