சேலம்-சென்னை 8 வழிச் சாலை தொடர்பாக கருத்து கேட்க அன்புமணிக்கு அனுமதி மறுப்பது ஏன்? என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
சேலம்-சென்னை பசுமை வழிச்சாலைக்கு எதிராக போராட்டங்கள் நடக்கின்றன. இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
சென்னை – சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்துக்காக சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏராளமான நிலங்கள் கையகப்படுத்தும் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, இந்த திட்டத்தினால் பாதிக்கப்படும் தர்மபுரி பாராளுமன்ற தொகுதி மக்களின் கருத்தை கேட்கும் கூட்டத்தை நடத்த, அந்த தொகுதியின் எம்.பி.யான அன்புமணி ராமதாஸ் முடிவு செய்தார். இதற்கு அனுமதி கேட்டு கொடுக்கப்பட்ட மனுவை போலீசார் நிராகரித்து விட்டனர். எனவே, போலீசாரின் இந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘பாதிக்கப்படும் மக்களின் கருத்துக்களை கேட்கும் கூட்டம் நடத்த அன்புமணி ஏன் அனுமதி வழங்க மறுக்கிறீர்கள்? உரிய பாதுகாப்பு வழங்கவேண்டியதுதானே?’ என்று அரசு தரப்புக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.
நீங்கள் ஏன் அனுமதி கேட்கிறீர்கள் என அன்புமணி தரப்பிடமும் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து இந்த வழக்கில் பதிலளிக்க அரசு தரப்பில் கால அவகாசம். கேட்கப்பட்டதை தொடர்ந்து வழக்கு செவ்வாய்க்கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.