சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை: அரசியல் காழ்ப்புணர்ச்சியில் எதிர்க்கிறார்கள்- முதல்வர்

சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை முழுக்க முழுக்க மத்திய அரசு திட்டம்! மத்திய அரசு செயல்படுத்துகிறது. மாநில அரசு ஒத்துழைப்பு கொடுக்கிறது.

சேலம்-சென்னை பசுமை வழிச்சாலையை அரசியல் காழ்ப்புணர்ச்சியில் எதிர்க்கிறார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சமூக ஆர்வலர்கள் குறித்தும் விமர்சித்தார்.

சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்திற்காக எதிர்ப்பு குறித்து முதல் அமைச்சர் எடப்பாடி க.பழனிசாமி இன்று (ஜூன் 30) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை முழுக்க முழுக்க மத்திய அரசு திட்டம்! மத்திய அரசு செயல்படுத்துகிறது. மாநில அரசு ஒத்துழைப்பு கொடுக்கிறது. இந்தத் திட்டம் முழுமையாக நிறைவேற்ற இன்னும் 5 ஆண்டுகள் ஆகலாம். சேலம்-சென்னை இடையே 1 கோடியே 7 லட்சம் வாகனங்கள் சென்றபோது 2 சாலைகள் போடப்பட்டன. இப்போ 3 கோடியே 20 லட்சம் வாகனங்கள் செல்லும்போது கூடுதலாக சாலையின் தேவை இருக்கிறது. வாகன விபத்துகளில் பலியாகும் உயிர்களை பார்க்க வேண்டும். உயிர்கள் போனால் வராது.

சென்னையில் இருந்து கேரளா, கன்னியாகுமரி மற்றும் வட மாவட்டங்கள் முழுவதும் நிறைய வாகனங்கள் போகின்றன. நமது பகுதியான சேலம், கரூர் தொழிற்சாலைகள் மிகுந்த பகுதி. நிறைய கனரக வாகனங்கள் செல்கின்றன. தூரம் குறையும் போது டீசல் சிக்கனம் ஆகிறது. இன்னும் 5 ஆண்டுகள் ஆனால் டீசல் விலை எவ்வளவு அதிகம் இருக்கும் என உங்களுக்கு தெரியும்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் இந்த சாலையை அமைக்கிறோம். சாலையை அமைக்கும் பகுதியில் உள்ள நில உடமைதாரர்களுக்கு தேவையான இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்படும். ஏற்கனவே திமுக ஆட்சிக் காலத்தில் 3500 ஏக்கர் எடுத்திருக்கிறார்கள். அப்போது வழிகாட்டும் மதிப்பு அளவுக்கு நிவாரணம் கொடுத்தார்கள். நாங்கள் கூடுதல் நிவாரணம் வாங்கிக் கொடுக்கிறோம். வழிகாட்டும் மதிப்பை அதிகரித்திருக்கிறோம்.

இந்தச் சாலையை போடுறதுக்குள்ள இதுல படுற விமர்சனம் கொஞ்ச நஞ்சமல்ல. 2 கைகளை இழந்த தொழிலாளிக்கு அரசு மருத்துவமனையில் 2 கைகளையும் பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்திருக்கிறார்கள். இந்தியாவில் வேறு எங்கும் இது நடந்ததில்லை. இதை எந்த சமூக ஆர்வலராவது பாராட்டியிருக்கிறாரா?

எவ்வளவோ நல்ல விஷயங்கள் நடக்கின்றன. எந்த சமூக ஆர்வலரும் அதை பாராட்டுவதில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதுபோன்ற பணிகளை விமர்சிக்கின்றனர். இந்த சாலை திட்டத்தால் தனிப்பட்ட முறையில் யாருக்கும் எந்த லாபமும் இல்லை. மொத்த தமிழ்நாட்டுக்கான வளர்ச்சித் திட்டம். இதை பூதாகரமாக்கி இந்தச் சாலைத் திட்டத்தை நிறுத்திவிட நினைக்கிறார்கள்.

இந்தியாவிலேயே 2-வது பசுமை வழிச்சாலையாக இந்தத் திட்டத்தை நமக்கு கொடுத்திருக்கிறார்கள். மேலும் 75,000 கோடி ரூபாய்க்கு சாலைகளை விரிவாக்க அனுமதி கொடுத்திருக்கிறார்கள். உள்கட்டமைப்பை நாம் அதிகப்படுத்த வேண்டியது அவசியம்.

இந்தியாவிலேயே உயர் கல்வியை அதிகம் மாணவர்கள் படிப்பது தமிழகத்தில்தான். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்றால் உள்கட்டமைப்பை அதிகப்படுத்த வேண்டும். எனவே இதற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close