சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை உள்ளிட்ட பிரச்னைகளில் நடைபெறும் கைது நடவடிக்கைகளுக்கு வைகோ கண்டனம் தெரிவித்து அறிக்கை விட்டார்.
சேலம்-சென்னை பசுமை வழிச்சாலைக்கு எதிரான போராட்டங்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் ஆகியவை தொடர்பாக பலர் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களைக் காக்கவும், சுற்றுச்சூழல் நாசத்தைத் தடுக்கவும், விவசாயிகள் உரிமைகளைப் பாதுகாக்கவும் போராடுகின்றவர்களை, தேசப் பாதுகாப்புச் சட்டம், தேசத்துரோகக் குற்றச்சாட்டு, குண்டர் சட்டம் ஆகிய கொடிய அடக்குமுறைச் சட்டங்களில் வழக்குப் பதிவு செய்து, அறவழிப் போராட்டக்காரர்களையும் சிறையில் அடைத்துத் துன்புறுத்துவது, தமிழக அரசின் அன்றாட நடவடிக்கை ஆகி விட்டது.
நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்து, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்க வந்த பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 14 பேரை காவல்துறை சுட்டுக்கொன்றது. மரண காயமுற்று மருத்துவமனையில் இருந்தவர்களைப் பார்க்கச் சென்றவர்கள் மீதும் தடியடி நடத்தினர். அரசியல் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
சேலம்-சென்னை எட்டு வழிச் சாலை குறித்த பிரச்சினையில், நிலங்களை இழக்கின்ற வேதனையால் தவித்து அபயக்குரல் எழுப்பும் விவசாயிகளைச் சந்திக்கச் சென்ற காஞ்சி மக்கள் மன்றம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பாலாறு பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 19 பேரை, காவல்துறை கைது செய்து, அடித்துத் துன்புறுத்தியதோடு, அவர்கள் பயணித்த வேனையும் பறிமுதல் செய்துள்ளது.
இதில் குறிப்பாக, காஞ்சி மக்கள் மன்றம், செஞ்சிலுவைச் சங்கம் போன்று மனித நேயத்துடன் தொண்டு செய்யும் அமைப்பு ஆகும். பார்வை இழந்தோர், வாய் பேச முடியாதோர், உடல் ஊனமுற்றோர் ஆகியோரைப் பராமரித்துப் பாதுகாக்கும் சேவை அமைப்பு ஆகும்.
அதன் ஒருங்கிணைப்பாளர் சகோதரி மகேஷ் அவர்கள், உடல் நலிவுற்ற நிலையிலும் அந்தத் தொண்டினைச் செய்து வருகின்றார். அந்த சகோதரியையும், அதேபோன்ற சேவையில் ஈடுபட்டுள்ள ஜெஸ்ஸி என்ற சகோதரியையும் கைது செய்துள்ளனர்.
தேசப் பாதுகாப்புச் சட்டம், குண்டர் சட்டம் போன்ற சட்டங்களில், பொய்வழக்குப் போடும் நோக்கத்தில் காவல்துறை இருப்பதாக அறிகின்றேன். ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்கச் சென்ற வேல்முருகன் மீது, ஒரு பழைய வழக்கில் கைது செய்து, இரக்கம் இல்லாமல் துன்புறுத்திச் சிறையில் அடைத்தனர்.
எட்டு வழிப் பாதை குறித்து, சமூக வலைதளங்களில் கருத்துக்கூறிய ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் வசீகரனை, சேலம் மாவட்ட காவல்துறையினர், சென்னை மதுரவாயல் வீட்டில் நள்ளிரவில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
‘இம்; என்றால் சிறைவாசம் என்ற சொற்றொடரை, அதிகார மமதையில் காவல்துறையின் மூலம் தமிழக அரசு அரங்கேற்றி வருகின்றது. அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுகின்ற வகையில் செயல்படும் தமிழக அரசின் போக்குக்கு, பலத்த கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், அடக்குமுறையின் மூலம் போராட்டங்களை நசுக்க நினைத்தால், அது ஒருபோதும் வெற்றி பெறாது; போராட்டம் மேலும் வீறுகொண்டு எழும் என அரசுக்கு எச்சரிக்கை செய்கின்றேன்.
இவ்வாறு வைகோ கூறியிருக்கிறார்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Salem chennai express highway protest emergency vaiko
காங்கிரசை முன்கூட்டியே ‘கவனிக்கும்’ திமுக: மற்ற கூட்டணிக் கட்சிகள்?
அர்ச்சனா வீட்டுல விசேஷம்… குவிந்த டிவி பிரபலங்கள்: என்னா ஆட்டம்?
தேன்மொழி நடிகையின் உலகமே இவரால் அழகாகி விட்டதாம்: யாரு அவரு?
சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 6 பேர் உடல் கருகி பலி
ஃபார்முக்கு திரும்பிய பிரித்வி ஷா: 227 ரன்கள் குவித்து சாதனை