பேருந்து நிறுத்தத்தின் முன் வைக்கப்பட்டுள்ள அதிமுக கொடிக்கம்பத்தை அகற்ற கோரிய வழக்கில் சேலம் ஆட்சியாளர் ரோகிணி, நெடுஞ்சாலைகள் துறை மண்டல பொறியாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்.
சேலம் பூலவாரி கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தங்கள் கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் 7 லட்சம் ரூபாய் செலவில் நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்கூடம் முன், பயணிகளுக்கும், மாணவர்களுக்கும் இடையூறாக அதிமுகவினர் அமைத்துள்ள கொடி கம்பத்தை அகற்றக் கோரியுள்ளார்.
சேலம் ஆட்சியாளர் ரோகிணி ஆஜராக உத்தரவு
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், குறிப்பிட்ட அந்த கொடிக்கம்பத்தை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. நெடுஞ்சாலைகள் சட்டத்தை மீறி, கொடிக்கம்பம் அமைக்க 15 நாட்களில் நெடுஞ்சாலைகள் துறை சேலம் மண்டல பொறியாளர் அனுமதியளித்துள்ளதாகத் தெரிவித்த நீதிபதிகள், இது சம்பந்தமாக உரிய ஆவண ஆதாரங்களுடன் நேரில் ஆஜராகும்படி, சேலம் மாவட்ட ஆட்சியர், நெடுஞ்சாலைத் துறை மண்டல பொறியாளர்களுக்கு உத்தரவிட்டனர்
மீண்டும் இந்த வழக்கு நீதிபதி சத்தியநாராயணன் மற்றும் நீதிபதி ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அரசு கால அவகாசம் கேட்டதால் வழக்கு விசாரணையை ஜனவரி மாதம் 22 ஆம் ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.