தி.மு.க இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நேற்று (ஜன.21) பிரம்மாண்டமாக நடைபெற்றது. 5 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அமைச்சர், தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில்
மாநாடு நடைபெற்றது.
முதல்வர் தி.மு.க தலைவர் ஸ்டாலின், திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன், திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.
மலை முகடு போல் தோற்றம் கொண்ட பிரம்மாண்ட நுழைவுவாயில், தலைவர்களின் படங்கள், தனித்தனி அரங்கங்கள் என ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில் சேலத்தில் நடைபெற்ற இளைஞரணி மாநாட்டு அரங்கத்திற்கு யுனிக் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் விருது வழங்கப்பட்டுள்ளது.
தி.மு.க இளைஞரணி மாநாட்டுக்காக சேலத்தில் அமைக்கப்பட்ட அரங்கம், உலகின் 'மிகப்பெரிய தற்காலிக மாநாட்டு அரங்கம்' என்று யுனிக் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் (Unique World Records) என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து இந்த மாநாட்டு அரங்கத்தை அமைத்த ‘பந்தல்’ சிவா தெரிவிக்கையில்,"9.50 லட்சம் சதுர அடி பரப்பளவில், 45 நாட்களில் மாநாட்டு அரங்கம் அமைக்கப்பட்டது. இதற்கு அங்கீகாரம் கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“