/indian-express-tamil/media/media_files/2025/05/24/7IT7G4evFSBqwYDqzXkz.jpg)
Salem
ஓமலூர் அடுத்த சின்னேரிகாடு பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி (68), கணவரை இழந்தவர். இவருக்கு ராஜா (45) மற்றும் முருகானந்தம் (43) என இரண்டு மகன்கள் உள்ளனர். முருகானந்தம் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வசித்து வரும் நிலையில், ராஜாவுடன் சரஸ்வதி சேலத்தில் வசித்து வந்தார்.
கடந்த மே 20 ஆம் தேதி, மாடு மேய்க்கச் சென்ற சரஸ்வதி, இரவு 7 மணி ஆகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் அவரைத் தேடிச் சென்றனர். அப்போது, சரஸ்வதிக்குச் சொந்தமான தோட்டத்தில், தலையில் பலத்த காயங்களுடன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும், அவரது காதில் இருந்த கம்மல் மற்றும் மூக்குத்தி ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றதும் தெரியவந்தது.
இது குறித்து தீவட்டிபட்டி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. டிஐஜி உமா, ஏடிஎஸ்பி சோமசுந்தரம், டிஎஸ்பி சஞ்சீவ் குமார், இன்ஸ்பெக்டர் செந்தில் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. நகைகளுக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டது காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியதில், கட்டிகாரநூர் பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் நரேஷ்குமார் மூதாட்டியைக் கொலை செய்து கொள்ளையடித்தது உறுதி செய்யப்பட்டது.
நரேஷ்குமாரைப் பிடிப்பதற்காக, சங்ககிரி அருகே உள்ள மலை அடிவாரத்திற்கு சனிக்கிழமை காலை காவல்துறையினர் சென்றனர். அப்போது, நரேஷ்குமார் காவல்துறையினரை கத்தியால் தாக்கியுள்ளார். இதில் காவல் உதவி ஆய்வாளர் விஜயராகவன் மற்றும் காவலர் செல்வகுமார் ஆகியோருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளர் கத்தியைக் கீழே போட்டு சரணடையுமாறு கூறியும் நரேஷ்குமார் கேட்காததால், அவரது வலது காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
பிடிபட்ட நரேஷ்குமார் மீது இருபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2020-ம் ஆண்டு மல்லூர் பகுதியில் ஒரு மூதாட்டியை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த வழக்கிலும் இவன் தொடர்புடையவன். ஆடு மாடு மேய்க்கும் பெண்கள், வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டிகளை குறிவைத்து கொடூரமாக தாக்கி கொள்ளையடிப்பதை நரேஷ்குமார் வழக்கமாக கொண்டவன் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினர் சுட்டதில் வலது காலில் காயமடைந்த நரேஷ்குமார், சங்ககிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.
மூதாட்டி கொலை வழக்கில் தொடர்புடைய கொள்ளையன் சுட்டுப்பிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.