சேலம் மாவட்டத்தில் நேற்று முன் தினம் தொடர்ந்து பெய்த கன மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 16 வயது மாணவன் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் நாராயண நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் முகமது ஆஷாத். இவர் நேற்று முந்தினம் இரவு நண்பர்களுடன் சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது மழையின் காரணமாக எதிர்பாராத விதமாக அருகில் இருந்த ஓடையில் தவரி விழுந்தார். மாணவர் முகமதுவை நணபர்கள் காப்பாற்ற முயற்சித்தும் ஓடையில் கரை புரண்டோடிய வெள்ளத்தினால் காப்பாற்ற முடியவில்லை. உடனே இத்தகவல் மாணவர் வீட்டிற்கு தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு வீரர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், மாணவனை கண்டுப் பிடிக்க முடியாததால் தேடும் பணி தோய்வுப்பெற்றது. ஆனால் மாணவன் அடித்துச் செல்லப்பட்ட 24 மணி நேரம் கழித்து இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார்.
சேலம் கருவாட்டுப் பாலம் அருகே துப்புரவு தொழிலாளர்கள் ஓடைக்குள் இறங்கி குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மாணவன் முகமது சடலமாக கிடந்தது கண்டறியப்பட்டது. இந்த தகவல் அறிந்த மாணவனின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் துயரத்தில் கதறி அழுதனர்.
தகவல் அறிந்த சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி சிறுவன் முகமது ஆஷாத் இல்லத்திற்கு நேரில் சென்றார். அங்கு இறந்த மாணவனின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.