இளமதியை பெற்றோருடன் அனுப்பிய போலீஸ்: திமுக எம்பி கண்டனம்

சேலம் அருகே சாதி மறுப்புத் திருமணம் செய்ததால் கடத்தப்பட்ட மணமகள் இளமதி நேற்று மேட்டூர் மகளிர் காவல்நிலையத்திற்கு வந்து பெற்றோருடன் செல்ல சம்மதம் தெரிவித்ததையடுத்து, போலீஸார்...

சேலம் அருகே சாதி மறுப்புத் திருமணம் செய்ததால் கடத்தப்பட்ட மணமகள் இளமதி நேற்று மேட்டூர் மகளிர் காவல்நிலையத்திற்கு வந்து பெற்றோருடன் செல்ல சம்மதம் தெரிவித்ததையடுத்து, போலீஸார் இளமதியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள கவுந்தப்பாடியைச் சேர்ந்த செல்வன், குருப்பநாயக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளமதி இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். செல்வன் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர். இளமதி மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர். இதனால், இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த காதல் ஜோடி, சேலம் மாவட்டம், காவலாண்டியூரில் திராவிடர் விடுதலைக் கழகம் (திவிக) சார்பில் மார்ச் 9-ம் தேதி சுயமரியாதை திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணம் செய்துகொண்ட தம்பதிகளுக்கு அச்சுறுத்தல் இருந்ததால் திருமணத்தை நடத்தி வைத்த திவிக பிரமுகர் காவை ஈஸ்வரன் மணமக்களை பாதுகாப்பாக ஒரு இடத்தி தங்க வைத்திருந்தார்.

இதனை அறிந்த மணமகள் இளமதியின் உறவினர்கள் 40-க்கும் மேற்பட்டோர் கும்பலாக வந்து காவை ஈஸ்வரனை வீடு புகுந்து தாக்கிவிட்டு அவரையும் வேறு ஒரு இடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த செல்வன் – இளமதி தம்பதியையும் தாக்கி காரில் கடத்திச் சென்றனர்.

சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட தம்பதியை தாக்கி கடத்தி சென்ற தகவலை அறிந்த திவிக தொண்டர்கள் சேலம் கொளத்தூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கடத்தப்பட்ட மணமக்கள் செல்வன், இளமதி மற்றும் திவிக நிர்வாகி காவை ஈஸ்வரனையும் மீட்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த திவிக தலைவர் கொளத்தூர் மணி, காவல் நிலையத்துக்கு சென்று கடத்தப்பட்டவர்களை மீட்க வலியுறுத்தியதால் செல்வன் மற்றும் ஈஸ்வரன் மட்டும் மீட்கப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இளமதியை மீட்க போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், நேற்று (மார்ச் 14) சேலம் மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளமதி தனது வழக்கறிஞர் சரவணனுடன் உடன் ஆஜரானார். அப்போது இளமதியின் வழக்கறிஞர் சரவணன் போலீசாரிடம் இளமதி பெற்றோர் உடன் செல்ல விரும்புவதாக கூறியுள்ளார்.

இதையடுத்து, போலீசார் இளமதியிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்திய பின்னர், இளமதி அவரது தாயாருடன் அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, இளமதியை மீட்க வலியுறுத்தி நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின்போது திங்கள்கிழமை மேட்டுர் நீதிமன்றத்தில் இளமதியை ஆஜர்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், பெண்ணின் வழக்கறிஞர் அளித்த புகாரில் இளம்பெண்ணை கடத்தியதாக தி.வி.க. தலைவர் கொளத்தூர் மணி, நிர்வாகிகள் ஈஸ்வரன், சரவணன் மற்றும் செல்வன் மீது பவானி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து திவிக தலைவர் கொளத்தூர் மணி ஊடகங்களிடம் கூறுகையில், “இளமதி கடத்தப்படும்போது உடன் இருந்தவர்கள் மீதும் என் மீதும் மணமகன் மீதும் கடத்தல் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இதில் அரசியல் தலையீடு இருப்பதாகவும் அமைச்சர் ஒருவரின் தலையீடு இருப்பதாகவும் ஒரு சந்தேகம் இருந்தது. தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அந்த சந்தேகம் உறுதியாகியுள்ளது. உண்மையாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தால், அன்றே வழக்கு பதிவு தகவல் வெளிவந்திருக்கும். ஆனால், தற்போது முன்தேதியிட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கலாம் என்ற ஐயம் உள்ளது. இதுபோன்ற பொய் வழக்குகள் எங்களுக்குப் புதிதல்ல. இந்த வழக்கை உரியவகையில் சந்திப்போம். இதற்கு துணை நின்றவர்களை நிச்சயமாக பொது வெளியில் அம்பலப்படுத்துவோம்.

தங்களது அரசியல் அதிகாரத்தை விருப்பம்போல் பயன்படுத்துவோரை பொதுமக்கள் பார்த்துக் கொண்டிருக்க கூடாது. அவர்களை சமூகத்திற்கு அடையாளம் காட்ட வேண்டும். இந்த வழக்கிற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறோம். விரும்பி திருமணம் செய்தவர்கள் வாழ வழிவகை செய்ய வேண்டும்.

இளமதியை பெற்றோருடன் அனுப்பும் காவல்துறை, பெண்ணின் அப்பா, மாமா, பெரியப்பா உள்ளிட்டோர் கடத்தல் வழக்கில் சிறையில் இருக்கும்போது அவரை பெற்றோர்கள் பொறுப்பிலேயே அனுப்புவது சரியானதா என்பதை யோசிக்க வேண்டும். திங்கள்கிழமை இளமதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது உரிய ஆணையை நீதிமன்றம் பிறப்பிக்கும் என்று நம்புகிறோம்” என்று என்று கொளத்தூர் மணி கூறினார்.

சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட தம்பதி தாக்கப்பட்டு கடத்தப்பட்ட நிலையில், மணமகள் இளமதி வழக்கறிஞருடன் ஆஜராகி தான் பெற்றோருடன் செல்ல விரும்புவதாக கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் திவிக தலைவர் கொளத்தூர் மணி, ஒரு அமைச்சரின் தலையீடு இருப்பதாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்த சம்பவம் தொடர்பாக, தருமபுரி எம்.பி டாக்டர் செந்தில்குமார், “தமிழகத்தில் பெண் உரிமை மிரட்டபடுகிறது. சமூக நீதி மறுக்கபடுகிறது. தற்காலிக வெற்றி என நம்பும் கோழைகளிடம் கேட்கிறேன். தைரியம் இருந்தால் இளமதியை தனியாக பிரஸ் மீட் அனுப்புங்க. அப்போ உங்க முகத்திரை கிழிந்து,சாயம் வெளுக்கும் அதை கண்ணாடியில் பார்த்து ரசித்து சிரித்து கொள்ளுங்கள்.” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close