கண்ணிமைக்கும் நொடியில் விபத்து; சேலம்-கோயம்புத்தூர் நெடுஞ்சாலையில் நடந்த சோக சம்பவம்
Salem-Coimbatore highway accident viral video Tamil News: சேலம்-கோயம்புத்தூர் நெடுஞ்சாலையில் நடந்த விபத்து வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், விபத்தை ஏற்படுத்தியவர்களை சேலம் மாவட்ட காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Salem news in tamil: கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த அஜித் என்ற இளைஞர், பழனிக்கு சென்று விட்டு அவரது நண்பர் அருண் உடன் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கண்மூடித்தனமான வேகத்தில் வந்த ஒரு கருப்புநிற கார் எதிரில் வந்த இவர்களை கவனிக்காமல் மற்றொரு காரை முந்த முயற்சித்து விபத்தை ஏற்படுத்தியது. விபத்தில் படுகாயம் அடைந்த இந்த இளைஞர்கள், சேலம் மூன்று ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த இளைஞர்களில் வாகனத்தை ஓட்டிய அருண் என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில், அஜித் குமார் ஐ.சி.யுவில் வென்டிலேட்டர் உதவிடன் உள்ளார்.
Advertisment
நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், பின்னால் வந்த கார் ஒன்றில் உள்ள கேமிராவில் இந்த விபத்து காட்சி பதிவாகியது என தெரிய வந்துள்ளது. இவற்றை ஆதாரமாக கொண்டு விசாரணையை துவங்கிய சேலம் மாவட்ட காவல்துறையினர், இந்த விபத்து நடந்த பகுதி சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காளிகவுண்டம்பாளையம் பகுதி என கண்டுபிடித்துள்ளனர்.
பின்னர், மகுடஞ்சாவடி காவல்துறையினரிடம் விபத்து ஏற்படுத்திய காரின் எண்ணை பெற்றுள்ளனர். தொடர்ந்து அவர்கள் நடத்திய விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய கார், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த வினோத் என்பவருக்கு சொந்தமானது என்றும், காரில் பயணித்த 4 நபர்களில் காரை ஓட்டியவர் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்றும் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, காரை ஓட்டி வந்த சதீஷ்குமார், காரின் உரிமையாளர் வினோத், உடன் வந்த 2 பேர் என 4 பேரை அதிரடியாக கைது செய்த சேலம் மாவட்ட காவல்துறையினர், அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 308, 184 மற்றும் 161 பிரிவுகளின் கீழ் மற்றும் மோட்டார் வாகன சட்டம் 177 வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
"காரை ஓட்டிய நபர்கள் உட்பட 4 பேரும் மதுபோதையில் இருந்தனர். அருகில் இருந்த காரை ஓவர் டேக் செய்யும் போது எதிரில் வந்த இரு சக்கர வாகனத்தை இவர்கள் கவனிக்கவில்லை. இதனால் தான் இந்த விபத்து ஏற்பட்டது" என மகுடஞ்சாவடி காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியது விசாரணையில் உறுதி செய்யப்பட்டதை அடுத்து நான்கு பேரை கைது செய்துள்ளதாகவும், இந்த விபத்தில் காட்சிகளோடு தகவல் அளிக்கப்பட்டதால் குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய முடிந்ததாகவும் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் குறிப்பிட்டுள்ளார்.
Dashcam footage of car records hit-and-run incident on Salem-Coimbatore highway. Two people arrested, pillion rider suffers a major injury. pic.twitter.com/OU0E8ZXFbF