சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், சூரமங்கலம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவுடன் 7 நாட்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருப்பவர் ஜெகநாதன். இவர், பல்கலைக்கழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக, விதிகளை மீறி சொந்தமாக ஒரு நிறுவனம் தொடங்கி, அதன் மூலம் அரசு பணத்தை தவறாக பயன்படுத்தியதாக பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகராக இருந்த இளங்கோவன், கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்
இந்த புகாரின் அடிப்படையில் சேலம் கருப்பூர் காவல்துறையினர் துணை வேந்தர் ஜெகநாதனை செவ்வாய் கிழமை மாலை கைது செய்தனர். அவரை வேனில் அழைத்துச் சென்று சேலம் மாநகர் பகுதியில் உள்ள சமுதாயக் கூடத்தில் வைத்து 6 மணி நேரத்துக்கும் மேலாக அவரிடம் விசாரணை நடத்தினர்.
ஜெகநாதன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், தகாத வார்த்தைகளால் பேசுதல், பொது இடங்களில் அநாகரிகமாக நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதைடுத்து ஜெகநாதன் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், சேலம் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு முன் ஜெகநாதன் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு இருதரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்டது.
இதையடுத்து துணைவேந்தர் ஜெகநாதனுக்கு 7 நாட்கள் நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மேலும் 7 நாட்கள் சூரமங்கலம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“