சேலம் பெரியார் பல்கலைகழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகன்நாதன், பல்கலைக்கழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக சொந்தமாக பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சி பவுண்டேஷன் என்ற அமைப்பை அனுமதி பெறாமல் தொடங்கி, அரசு நிதியை பயன்படுத்தியதுடன், பல்கலைக்கழக அதிகாரிகளைக் கொண்டே அந்தநிறுவனத்தை செயல்படச் செய்ததாக பல்கலைக்கழகத்தின் ஊழியர் சங்கத்தினர் காவல் துறையில் புகார் அளித்திருந்தனர்.
அதேபோல் சாதிப் பெயரை குறிப்பிட்டு திட்டியதாக கிருஷ்ணவேணி, சக்திவேல் ஆகியோரும் துணைவேந்தருக்கு எதிராக புகார் அளித்திருந்தனர். இந்தப் புகார்களின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் கருப்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து துணைவேந்தர் ஜெகன்நாதன் கைதான நிலையில், சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இதனிடையே, உயர் நீதிமன்றத்தில் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி ஜெகன்நாதன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது சேலம் பெரியார் பல்கலைகழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கை விசாரிக்க தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
ஆவணங்களை சரிபார்த்ததில் ஜெகநாதனின் நடவடிக்கைகளில் குற்ற நோக்கம் இருப்பதாக தெரியவில்லை. வழக்கை ரத்து செய்ய கோரிய ஜெகநாதன் மனு மீதான விசாரணை 4 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்படுவதாகவும், மேலும் தடையை நீக்க வேண்டும் என்றால் தனி மனு தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“