மதுரை அரசரடி ரயில்வே மைதானத்தை தனியாருக்கு தாரைவார்ப்பதற்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்ட தமிழறிஞர் சாலமன் பாப்பையா, “போகிற போக்கைப் பார்த்தால் நாட்டையே விற்றுவிடுவார்கள் போலிருக்கிறது. இதை அனுமதிக்ககூடாது” என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மதுரை அரசரடி ரயில்வே விளையாட்டு மைதானம் தனியாருக்கு தாரைவார்க்கப்படுவதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு. வெங்கடேசன் கையெழுத்து இயக்கத்தை நவம்பர் 6-ம் தேதி தொடங்கி வைத்தார்.
மதுரை அரசரடி ரயில்வே மைதானத்தை தனியாருக்கு தாரைவார்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்துப் பேசிய சு. வெங்கடேசன், “மதுரை ரயில்வே மைதானம் மற்றும் ரயில்வே காலனியில் உள்ள 40.26 ஏக்கர் நிலத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது.
இந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 1600 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும். இந்த மைதானம் மதுரையைச் சேர்ந்த பல்லாயிரம் விளையாட்டு வீரர்களை உருவாக்கி உள்ளது. இந்த மைதானத்தை நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ரயில்வே காலனி பகுதியில் 1550 மரங்கள் உள்ளன. மதுரை மாநகராட்சி முழுவதும் இருக்கும் மரங்களின் எண்ணிக்கையை விட ரயில்வே காலணி பகுதியில் இருக்கும் மரங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம் ஆகும். மதுரை மக்களுக்கு சுவாசிக்க தகுந்த சுத்தமான காற்றையும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் இந்த மைதானம் மற்றும் மரங்கள் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. அதனால் தான், இந்த இடத்தை மதுரையின் நுரையீரல் என்று அழைக்கிறோம். இப்படிப்பட்ட ஒரு இடத்தை தற்போது தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்ப்பது என்பது மதுரைக்கே மிகப்பெரும் தீங்கிழைக்கும் செயலாகும். இதனை ரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும் என வலியுறுத்தி இந்த மாபெரும் கையெழுத்து இயக்கத்தை தொடங்குகிறோம்” என்று கூறினார்.
மதுரை ரயில்வே மைதானத்தை தனியாருக்கு தாரைவார்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்படும் இந்த கையெழுத்து இயக்கத்திற்கு மதுரையைச் சேர்ந்த பலரும் ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டு வருகிறார்கள். மதுரையில் வசிக்கும் மக்களிடம் கையெழுத்து பெறும் முயற்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் களம் இறங்கி உள்ளனர்.
இந்நிலையில், மதுரையைச் சேர்ந்தவரும், புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும் முன்னாள் தமிழ் பேராசிரியரும், தமிழ் அறிஞருமான சாலமன் பாப்பையா, மதுரை ரயில்வே மைதானத்தை தனியாருக்கு தாரைவார்ப்பதற்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
சாலமன் பாப்பையா கையெழுத்திட்ட வீடியோவை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் மதுரை எம்.பி சு. வெங்கடேசன் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், தமிழறிஞர் சாலமன் பாப்பையா கூறியிருப்பதாவது: “மதுரை ரயில்வே மைதானத்தில் சில நேரங்களில் எங்கள் பிள்ளைகள் சென்று விளையாடுவார்கள். என்னால் அங்கு போக முடியவில்லை என்றாலும், தற்போது முதியவர்கள் பலரும் காலை வேளையில் நடை பயிற்சி மேற்கொண்டு வருவதை நான் பார்க்கிறேன்.
இது மக்களுடைய சொத்தாக இருக்கிறது. இந்த சொத்தை தனியாருக்கு விற்பது என்பது, போகிற போக்கில் நாட்டையே தனியாருக்கு விற்று விடலாம் போல இருக்கிறது. மிகப்பெரிய மாற்று வேலைகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. இது கூடாது. என்றைக்கும் போலவே மக்கள் அங்கு சென்று ஓடவும், விளையாடவும், நடக்கவும் மைதானம் இருக்க வேண்டும் என நான் வேண்டிக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“