கொரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழகத்தில் சலூன் கடைகள், முடித்திருத்தும் கடைகள், அழகு நிலையங்கள் விதிமுறைகளுடன் திறக்கப்பட்டுள்ளன. சுமார் 2 மாதங்களுக்குப் பிறகு சலூன் கடைகள் திறக்கப்பட்டதால், நீண்டு வளர்ந்திருந்த தங்கள் முடிகளை வெட்டுவதற்காக ஆண்கள் கணிசமான அளவில் சலூன் கடைகளுக்கு சென்றனர். சலூன் கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா இந்தியன் எக்ஸ்பிரஸ் ஸ்பாட் விசிட் செய்தது. சலூன் கடைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. நான்காவது கட்ட பொது முடக்கம் மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொது முடக்கத்தால், அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளைத் தவிர, வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், உடற்பயிற்சி நிலையங்கள், சலூன்கள், அழகு நிலையங்கள், ஸ்பாக்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால், ஆண்கள் முடிவெட்ட முடியாமல் நீண்ட தலை முடியுடனும் தாடி, மீசை வளர்ந்து காணப்பட்டனர். பொது முடக்க கால கட்டத்தில் சிலர் தங்கள் நண்பர்களிடம் முடிவெட்டிக்கொண்டனர். சிலர் தங்கள் நண்பர்களுக்காக பொது முடக்க கால நோய்த்தொற்று அளவைப் பொறுத்து பொது முடக்க கால முடித்திருத்தும் கலைஞர்களாக மாறினார்கள்.
இந்த நிலையில்தான், 4-ம் கட்ட பொது முடக்க நீட்டிப்பு அறிவிப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. கடந்த வியாழக்கிழமை முதல் தமிழகத்தில் சலூன் கடைகள் திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் சமூக இடைவெளி, கை கழுவுதல், முகக்கவசம் அணிவது உள்ளிட்ட நடவடிக்கைகளுடன் செயல்பட வேண்டும் என்று சலூன் கடைகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியது.
தமிழக அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழகத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் சலூன் கடைகள் திறக்கப்பட்டன. சுமார் 2 மாத இடைவெளிக்குப் பிறகு சலூன் கடைகள் திறக்கப்பட்டதால், எப்போது சலூன் கடைகள் திறப்பார்கள் எப்போடு முடிவெட்டலாம் என்று வளர்ந்த தாடி மீசையுடன் காத்திருந்த ஆண்கள், சலூன் கடைகளை நோக்கி கணிசமான அளவில் சென்றனர்.
சலூன் கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா, எப்படி செயல்படுகின்றன என்பது குறித்து அறிந்துகொள்ள சேலம், புதூர் ரோட்டில் பழைய சூரமங்லம் பகுதியில், உள்ள சலூன் கடைகளுக்கு சென்றோம்.
சேலம், புதூர் ரோடு பழைய சூரமங்கலம் பகுதியில் தல தளபதி சலூன் கடை நடத்திவரும் விஜி என்பவர், தனது கடையில் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட விதிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்படுவதாகக் கூறினார்.
இது குறித்து தல தளபதி சலூன் கடை உரிமையாளரும் முடிதிருத்தும் கலைஞருமான விஜி ஐ.இ தமிழுக்கு கூறுகையில், “நான் பொது முடக்கத்துக்குப் பிறகு நேற்றுதான் சலூன் கடையைத் திறந்தேன். சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது, முகக்கவசம் அணிவது, கைகளை ஹேண்ட் சானிடைசர் கொண்டு சுத்தம் செய்வது ஆகிய நடவடிக்கைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்படுகின்றனர். வருகிற வாடிக்கையாளர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் ஆகிய ஏதேனும் அறிகுறிகள் இருக்கிறதா என்று கேட்டு அறிந்த பின்னரே, அவர்கள் கடைக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். நகராட்சி அலுவலர்களும் காலையில் சலூன் கடைக்கு வந்து சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், கை சுத்தம் செய்தல் ஆகியவை கடைபிடிக்கப்படுகிறதா என்று ஆய்வு செய்தனர். அப்போது வாடிக்கையாளர் ஒருவர் முகக்கவசம் அணியாமல் வந்திருந்தார். அவரிடம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தினர். பின்னர், அவருக்கு 100 ரூபாய் அபராதம் விதித்து வசூலித்துச் சென்றனர்.” என்று கூறினார்.
சலூன் கடைக்கு முடிவெட்டுவதற்காக வந்திருந்த பெஞ்சமின் என்ற இளைஞர், “சுமார் 2 மாத்திற்குப் பிறகு, முடிவெட்டுவதால் சந்தோஷமாக இருக்கிறது” என்று கூறினார்.
இருப்பினும், சலூன் கடைகளில் முடிவெட்டும்போது முடிதிருத்துபவர் மட்டும்தான் முகக்கவசம் அணிந்திருக்கிறார். முடிவெட்டும்போது முகக்கவசம் அணிய முடியாது என்பதால் வாடிக்கையாளர் கள் முகக்கவசம் அணியாமல் உள்ளனர்.
பெரும்பாலான முடிதிருத்தும் நிலையங்கள் 10X10 அளவு கொண்டவையாக இருக்கிறபோது, அங்கே 3 அல்லது 4 பேர் இருந்தாலே சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியாகி விடுகிறது. இருப்பினும் முடிந்த அளவு சலூன் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க முயற்சி செய்கின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.