சமயபுரத்தில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்: லட்சக்கணக்கானோர் பங்கேற்பு... குற்றங்களைத் தடுக்க தீவிர பாதுகாப்பு

சமயபுரத்தில் சித்திரை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில் குற்றங்களைத் தடுக்கும் பொருட்டு 13 கிரைம் டீம், 50 சிசிடிவி கேமராக்கள் காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.

சமயபுரத்தில் சித்திரை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில் குற்றங்களைத் தடுக்கும் பொருட்டு 13 கிரைம் டீம், 50 சிசிடிவி கேமராக்கள் காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
தேர் தேர்

தமிழகத்தில் சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இக்கோவிலில் உள்ள அம்மனை வேண்டினால் நினைத்தது நடக்கும், செல்வம் பெருகும், குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

Advertisment

மேலும், உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்கள் நோய்,நொடியின்றி வாழவும்,குடும்பம் செழிக்கவும் மாசி மாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை அம்மன் விரதம் இருப்பதால் அம்மனை குளிர்விக்க பூச்சொரிதல் நடைபெறும்.

இந்த விழாக்காலங்களில் மரபு மாறி தன்னைத்தானே வறுத்திக்கொண்டு பக்தர்களுக்காக 28 நாட்கள் அம்மனே பச்சைப் பட்டினி விரதம் இருப்பது இக்கோயிலின் தனிச் சிறப்பு. இந்த நாட்களில் அம்மனுக்கு அரிசி,துள்ளுமாவு ,இளநீர் மட்டுமே நைவேத்தியம் செய்யப்படுகிறது. இதனால் இக்கோவிலுக்கு தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து தரிசனம் செய்வதற்காக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்ரையாகவும், வாகனங்களில் வந்து செல்கின்றனர்.

முக்கியமாக பெண்கள் அதிகமானோர் தீச்சட்டி ஏந்தியும்,பல்வேறு காவடி தூக்கியும், பறவை காவடியாகவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

Advertisment
Advertisements

கடந்த 6 ந்தேதி கொடியேற்றத்துடன் சித்திரை தேர்த் திருவிழா தொடங்கியது.அன்று காலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் புறப்பாடாகி கொடிமரம் முன்பு எழுந்தருளினார். தொடர்ந்து சிவாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் முழங்க கோயிலின் உள்பிரகாரத்தில் உள்ள தங்க கொடிரத்திற்க்கும், அஸ்திர தேவர்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று மந்திரங்கள், மேளதாளங்கள் முழங்க மாரியம்மன் படம் தாங்கிய கொடியினை கொடிமரத்தில் ஏற்றினர்.

சித்திரை தேரோட்ட விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோயிலை வலம் வருகிறார். இரவில் தினமும் அம்மன் சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம் யானை, சேஷா, மரக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

நேற்று இரவு அம்மன் வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா இன்று நடைபெற்றது. காலை 10.31 மணிக்குள் மேல் அம்மன் திருத்தேரில் எழுந்தருள திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி தாய் மகமாயி, பராசக்தி முழக்கங்கள் விண்ணதிர நடைபெற்றது.

இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். 
தேரோட்ட விழாவைக்காண வந்த பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. நீர் மோர் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் ஓரங்களில் நடந்து வரும் பக்தர்களுக்கு குடிநீர், உணவு, பானகம் உள்ளிட்டவற்றை தன்னார்வலர்கள், பொதுமக்கள் வழங்கினர்.

கடந்த இரண்டு நாட்களாகவே திருச்சி மட்டுமல்லாது பிற மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வந்துள்ள லட்சக்கணக்கானோர் கூடியிருக்கும் சமயபுரத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், தேர் திருவிழாவை காண வந்த பக்தர்களின் பாதுகாப்புக்காகவும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் தலைமையில், 4 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 16 காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள், 31 காவல் ஆய்வாளர்கள், 1263 காவல் ஆளிநர்கள் மற்றும் 275 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும், குற்றங்களைத் தடுக்கும் பொருட்டு 13 கிரைம் டீம், 50 சிசிடிவி கேமராக்கள், முக்கியமான இடங்களில் வாட்ச் டவர்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 
இரண்டு நாட்களுக்கு சமயபுரம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு 100 ரூபாய் கட்டண தரிசனத்தை ரத்து செய்து இலவச தரிசனத்தை கோவிலில் இணை ஆணையர் பிரகாஷ் அறிவிப்பு வெளியிட்டு ஏற்பாடுகளை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


க.சண்முகவடிவேல்

samayapuram Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: