Advertisment

சமயபுரம் வங்கியில் 500 சவரன் நகை கொள்ளை! கேமரா ஹார்ட் டிஸ்க்கையும் விட்டு வைக்காத கொள்ளையர்கள்!

குறிப்பிட்ட 5 வாடிக்கையாளர்களின் லாக்கர்கள் மட்டும் உடைக்கப்பட்டு இருப்பதால்...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சமயபுரம் வங்கியில் 500 சவரன் நகை கொள்ளை! கேமரா ஹார்ட் டிஸ்க்கையும் விட்டு வைக்காத கொள்ளையர்கள்!

திருச்சி சமயபுரத்தில் உள்ள வங்கியின் லாக்கரை உடைத்து சுமார் 500 சவரன் நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

திருச்சியை அடுத்த சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் செல்லும் வழியில் நம்பர் 1 டோல் கேட் பகுதியில் பஞ்சாப் நே‌ஷனல் வங்கி உள்ளது. இங்கு திருச்சி, சமயபுரம், மண்ணச்சநல்லூர் மற்றும் பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர். அத்துடன் விவசாயிகளும், பொதுமக்களும் நகைகளை அடகு வைத்துள்ளனர்.

தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் பலர் தங்களது நகைகளை சேஃப்டி லாக்கர் எனும் பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்துள்ளனர். தினந்தோறும் கோடிக்கணக்கில் பணம் பரிமாற்றம் நடைபெறும் இந்த வங்கியில் நேற்று நள்ளிரவில் மிகப்பெரிய கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை பணி நேரம் முடிந்ததும் ஊழியர்கள் வங்கியை பூட்டிவிட்டு சென்றனர். சனிக்கிழமை குடியரசு தின விடுமுறை, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினமாகும். 2 நாட்கள் விடுமுறையை தொடர்ந்து, இன்று காலை வழக்கம்போல் ஊழியர்கள் வங்கியை திறந்து உள்ளே சென்று பார்த்த போது, வங்கியின் பல்வேறு பகுதிகளில் அடையாளங்களை மாற்றும் அளவிற்கு பொருட்கள் சின்னாபின்னமாகி கிடந்தன. அங்கு கொள்ளை சம்பவம் நடந்திருப்பதை ஊழியர்கள் அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மேலதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அவர்கள் வந்து பார்த்த போது, வங்கியின் தனி அறையில் இருந்த வாடிக்கையாளர்களுக்கு சொந்தமான 5 லாக்கர்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த நகை மற்றும் பணம் கொள்ளை போயிருந்தது தெரிந்தது. மேலும் அதன் அருகிலேயே லாக்கர்களை உடைக்க பயன்படுத்திய கியாஸ் வெல்டிங் மெஷின், சிலிண்டர், சுத்தியல், கடப்பாரை உள்ளிட்டவை கிடந்தன.

500 சவரன் நகைகள் கொள்ளை

இதில் வாடிக்கையாளர்களின் லாக்கர்களில் இருந்த ரூ.5 கோடி பணம் மற்றும் சுமார் 500 சவரன் நகைகள் கொள்ளை போயிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 2 நாட்கள் வங்கிக்கு விடுமுறை என்பதால் திட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

தகவல் அறிந்த மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூ, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் மற்றும் போலீசார் விரைந்து வந்து வங்கி முழுவதும் ஆய்வு செய்தனர். வங்கியின் பிரதான முன் வாசலில் இருந்த பூட்டை உடைக்க கொள்ளையர்கள் முயற்சி செய்துள்ளனர். ஆனால் அது தோல்வி அடைந்ததால் பின்புறம் உள்ள சுவரில் துளைபோட்டு கொள்ளையர்கள் உள்ளே புகுந்துள்ளனர். பல நாட்களாக திட்டம் தீட்டிய பின்னரே இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளது தெரியவந்துள்ளது.

குறிப்பிட்ட 5 வாடிக்கையாளர்களின் லாக்கர்கள் மட்டும் உடைக்கப்பட்டு இருப்பதால், எந்த லாக்கரில் எவ்வளவு பணம் உள்ளது என்பது தெரிந்தே கொள்ளையர்கள் கொள்ளை அடித்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.

மேலும் மக்கள் நடமாட்டம் மிகுந்த அந்த பகுதியில் பல்வேறு இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் வங்கியில் சுழற்சி முறையில் காவல் பணியிலும் செக்யூரிட்டிகள் பணியில் இருக்கிறார்கள். அதனை முழுமையாக கணித்த கொள்ளையர்கள் அவர்கள் கண்ணில் படாதவாறு உள்ளே புகுந்து கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

கொள்ளை நடந்த வங்கிக்கு உடனடியாக கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்கள் விட்டுச்சென்ற தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அத்துடன் இன்று காலை முதல் வங்கிக்குள் வாடிக்கையாளர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. வங்கி அதிகாரிகள், ஊழியர்களிடம் முதல்கட்ட விசாரணையை போலீசார் தொடங்கினர்.

வாடிக்கையாளர்களுக்கு மொபைல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த வங்கியின் மற்ற வாடிக்கையாளர்களும் தங்களது பணமோ, நகையோ கொள்ளையடிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய வங்கியில் குவிந்து வருகின்றனர்.

Trichy Punjab National Bank
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment