வெங்கடேச பண்ணையாரின் உறவினரை போலீஸ் வளைக்க ஆரம்பித்திருக்கிறது. அவர் வழக்கறிஞரும்கூட! எனவே இதை கண்டித்து வக்கீல்கள் போராட்டம் நடத்தினர்.
வெங்கடேச பண்ணையார், முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் சென்னையில் என்கவுன்டர் செய்யப்பட்டார். அந்த விவகாரம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 2006 தேர்தலில் தென் மாவட்டங்களில் அதிமுக.வின் தோல்விக்கு அதுவும் ஒரு காரணமாக அமைந்தது.
வெங்கடேச பண்ணையார் மறைவுக்கு பிறகும், அவருக்கு நெருக்கமாக இருந்த பலரை போலீஸ் கண்காணித்தபடியே இருக்கிறது. இந்தச் சூழலில் சென்னை பாரிமுனை பகுதியில் பட்டப்பகலில் ஒரு கொலை நடந்தது. இது தொடர்பாக சிலரை போலீஸார் பிடித்துச் சென்றனர்.
அப்படி பிடித்துச் செல்லப்பட்டவர்களில் சிலர் அலுமினியம் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுபவர்கள்! எனவே மேற்படி அலுமினியம் நிறுவனத்தின் உரிமையாளரான செந்தில் என்கிற சம்போ செந்தில் உரிய விளக்கம் பெற போலீஸ் நிலையம் சென்றார். செந்தில் வழக்கறிஞரும் கூட! சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணி செய்கிறார் இவர்!
சம்போ செந்தில் தனது நிறுவன ஊழியர்கள் கைதானது தொடர்பாக போலீஸாரிடம் கேட்டபோது, அது வாக்குவாதமாக மாறியது. செந்திலைப் பற்றி போலீஸார் விசாரித்தபோது, அவர் வெங்கடேச பண்ணையாரின் நெருங்கிய உறவினர் என்பது தெரிய வந்தது. செந்திலின் ஊர், தூத்துக்குடி மாவட்டம் தண்டுபத்து!
பிறகு கைதானவர்களிடம் பெற்ற வாக்குமூலம் அடிப்படையில் சம்போ செந்திலையும் அந்த வழக்கில் போலீஸார் சேர்த்திருக்கிறார்கள். அதே வேகத்தில் திருப்போரூரில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கிலும், பாண்டிச்சேரி எல்லையில் சூரணாம்பட்டு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கிலும் குற்றவாளிகளின் வாக்குமூலம் அடிப்படையில் சம்போ செந்தில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் நோக்கில் இந்த வழக்குகளை போடுவதாக கூறுகிறார்கள்.
தமிழகத்தில் ஏற்கனவே திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் வழக்கறிஞர் செம்மணியை பொய் வழக்கில் போலீஸார் கைது செய்ய முயன்றதும், அவரை கடத்திச் சென்று தாக்கியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல மாநிலத்தின் பல இடங்களில் வழக்கறிஞர்கள் மீது நடக்கும் தாக்குதலின் தொடர்ச்சியாக செந்திலை போலீஸார் குறி வைத்திருப்பதாக குறிப்பிட்டு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கடந்த 18-ம் தேதி நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இன்னொருபுறம், வெங்கடேச பண்ணையாரின் உறவினர் என்ற அடிப்படையில் சம்போ செந்திலை குறிவைத்து போலீஸார் பொய் வழக்குகளை பாய்ச்சுவதாக நாடார் அமைப்புகள் குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றன. இது தொடர்பான போராட்டங்களுக்கும் அந்த அமைப்புகள் ஆயத்தம் ஆகி வருகின்றன. இதற்காக விரைவில் போராட்டக் குழு அமைத்து, போராட்டத் திட்டங்கள் அறிவிக்கப்படும் என அவர்கள் கூறினர்.