சாம்சங் நிறுவனத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அக்டோபர் மாதம் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். சுமாா் 37 நாள்கள் அவா்களுடன் பல்வேறு வகையில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. போராட்டம் நடத்திய தொழிலாளர்களுடன் அமைச்சா்கள் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடர்ந்து சுமுக தீா்வு காணப்பட்ட நிலையில், இப்போது மீண்டும் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளில் சாம்சங் நிறுவனம் ஈடுபடுவதாக தொழிலாளர்கள் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர். முந்தைய போராட்டத்தில் ஈடுபட்ட பின், மீண்டும் பணிக்கு திரும்பிய தொழிலாளர்களில் பெரும்பான்மையினருக்கு ஏற்கெனவே அவர்கள் பணியாற்றி வந்த பணி வழங்கப்படவில்லை என்றும், 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு நிர்வாகம் தரப்பிலிருந்து எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் சாம்சங் நிர்வாகம் மீது அவர்கள் புகார் அளித்துள்ளனர்.
இதனிடையே, நிர்வாகத் தரப்பிலிருந்து வரும் அழுத்தம் தாங்காமல் அந்நிறுவனத்தைச் சார்ந்த ஊழியர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதால் சிஐடியு தொழிலாளா் சங்கத் தொழிலாளர்கள் உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அதன்படி, சாம்சங் தொழிற்சாலை வாளகத்தினுள்ளே உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒருநாள் அடையாளப் போராட்டமாக இது அமையுமென்றும் 1500 தொழிலாளர்கள் இதில் பங்கேற்பார்கள் என்றும் சி.ஐ.டி.யு தரப்பு தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“