காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் சிப்காட்டில் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பணிபுரியும் 1,200 தொழிலாளர்கள் கடந்த 9 ஆம் தேதி முதல் ஆலைக்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் அதிக சம்பளம், பணிநேரம் குறைப்பு மற்றும் ஆலையில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் அமைப்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர்.
கைது
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், அவர்கள் வேலைக்கு வராவிட்டால் சம்பளம் பிடித்தம் மற்றும் பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சாம்சங் நிர்வாகம் தெரிவித்தது. இருப்பினும் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தொழிலாளர்கள் பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுப்பட்ட வந்த சூழலில், அந்த பந்தல் இரவோடு இரவாக போலீசாரல் அகற்றப்பட்டுள்ளது. மேலும், சாம்சங் தொழிலாளர்களின் வீடுகளுக்கு நள்ளிரவில் சென்ற போலீசார், 10-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். பந்தல் அகற்றப்பட்டாலும் அதே இடத்தில் அமர்ந்து கொட்டும் மழையிலும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சி.ஐ.டி.யு தலைவர் சௌந்தரராஜன் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் 5-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளில் அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் சொந்த பிணையில் ஊழியர்களை போலீசார் உடனடியாக விடுவித்தனர்.
வாபாஸ்
இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் முன்பு நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் 'சாம்சங்' நிறுவன தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சாம்சங் தொழிலாளர்கள் 09.09.2024 அன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தப் போராட்டத்தை விரைவில் பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்குமாறு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியிருந்தார்கள்.
இதன்படி பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர், சிறு, குறு, நடுத்தரதொழில்கள் துறை அமைச்சர், தொழிலாளர் நலன்-திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சர் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆகியோரின் தலைமையில் பல்வேறு துறைகளின் அரசு அலுவலர்கள் இருதரப்பினரிடமும் பல்வேறு நிலைகளில் பேச்சு வார்தைகளை நடத்தினார்கள்.
இப்பேச்சு வார்த்தையின் பயனாக சாம்சங் நிர்வாகம், தொழிலாளர்களின் நலனைக் கருதி பல்வேறு நலத்திட்டங்கள் அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக 15.10.2024 அன்று தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் முன்பு நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நிர்வாகத்தரப்பு மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்தப் பேச்சு வார்த்தையில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.
1. தொழில் அமைதி மற்றும் பொது அமைதி காக்கும் பொருட்டு தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை உடனடியாக கைவிட்டு பணிக்கு செல்ல வேண்டும்.
2. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள். மீண்டும் பணிக்கு திரும்பும்போது நிர்வாகம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட காரணத்திற்காக மட்டும் எவ்வித பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.
3. வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்பும் தொழிலாளர்கள் நிர்வாகத்தினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் மேலும் நிர்வாகத்திற்கு எதிராக எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது.
4. தொழிலாளர்கள் முன்வைத்த ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கையின்மீது நிர்வாகம் எழுத்துப்பூர்வமாகப் பதிலுரையை சமரச அலுவலர் முன்பு தாக்கல் செய்ய வேண்டும்.
மேற்கண்ட அறிவுரைகளை இருதரப்பினரும் ஏற்றுக் கொண்டு, வேலை நிறுத்தத்தை கைவிட்டு, தொழிலாளர்கள் உடனடியாகப் பணிக்கு திரும்புவதாக தெரிவித்தனர். இதனால், சாம்சங் தொழிற்சாலையில் நடைபெற்று வந்த வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்ததது. தொழிலாளர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப உள்ளார்கள்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.