காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் கடந்த 9 ஆம் தேதி முதல் ஆலைக்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிக சம்பளம், பணிநேரம் குறைப்பு மற்றும் ஆலையில் சங்கத்திற்கான அங்கீகாரம் ஆகியவற்றை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது.
போராடும் தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என ஆலை நிர்வாகம் தெரிவித்தது. அவர்கள் வேலைக்கு வராவிட்டால் சம்பளம் பிடித்தம் மற்றும் பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்தது. இருப்பினும் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் அறிவித்த சூழலில், போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசை கம்யூனிஸ்ட் தொழிற்சங்கம் கடுமையாக சாட்டியுள்ளது.
சாம்சங் தொழிலாளர்களின் உரிமைகளை அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், சட்டத்திற்கு உட்பட்டு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிர்புறம் உள்ள ஒரு வீதியில் யாருக்கும் இடையூறு இல்லாத அனுமதிக்கப்பட்ட பகுதி என்கிற முறையில் 5-10-2024 அன்று ஆர்ப்பாட்டம் நடத்திட 26-9-2024 அன்று அனுமதி கோரப்பட்டது.
"ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ளலாம் என்று இன்று காலை காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையில் இருந்து அதிகாரப்பூர்வமாக நமக்கு தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்பாடு செய்திருக்கின்ற சூழ்நிலையில், திடீரென்று இன்று இரவு 10:35 மணி அளவில் காவல்துறை அதிகாரிகள் அனுமதி மறுப்பதற்கான கடிதம் வீட்டிற்கு வந்தது. அந்த கடிதத்தில் அனுமதி மறுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்" என்று கம்யூனிஸ்ட் தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கம்யூனிஸ்ட் தொழிற்சங்கம், "சுதந்திர இந்தியாவில் அகிம்சாவழியில் கூட போராட தடை விதிப்பது நவீன கொத்தடிமைக்கு வழி வகிக்கிறதா இந்த அரசாங்கம், இது விடியல் ஆட்சியா இல்லை பிரிட்டிஷ் ஆட்சியா? அரசே போராடும் தார்மீக உரிமையை பறிக்காதே." என்று தெரிவித்துள்ளது.
கைது
இதனிடையே, சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சென்னையில் இடதுசாரி கட்சிகளின் சார்பில் இன்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை போலீசார் கைது செய்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“